திரையுலகில் நடிகைகளை ஊக்கப்படுத்தவும் வழிகாட்டவும் நம்பிக்கையான ஒருவர் தேவை என்கிறார் நடிகை சாய் தன்ஷிகா.
மேலும், எல்லா காலகட்டங்களிலும் இதுபோன்ற நம்பிக்கையானவர்கள் உடன் இருந்தால்தான் நடிகைகளுக்கு வெற்றி என்பது தொடர்கதையாக அமையும் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள புதிய இணையத்தொடர் ‘ஐந்தாம் வேதம்’. இதில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், ஒய்.ஜி.மகேந்திரன், தேவதர்ஷினி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நாகா இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘மர்மதேசம்’, ‘ருத்ரவீணை’, ‘சிதம்பர ரகசியம்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களையும், ‘அனந்தபுரத்து வீடு’ என்ற திரைப்படத்தையும் இயக்கியவர்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது ‘ஐந்தாம் வேதம்’ தொடர்.
“நான்கு வேதங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஐந்தாவது வேதம் ஒன்று சிவன் கோவிலில் மறைத்துவைக்கப்பட்டு இருப்பதாகவும் உரிய காலத்தில் அதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்றும் ஒரு கதை கூறப்படுவதுண்டு. இதை மையப்படுத்தி ஐந்தாம் வேதத்தை பலர் தேடிச்செல்வதாக இந்த இணையத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது,” என்கிறார் இயக்குநர் நாகா.
ஐந்தாம் வேதத்திற்கும் இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது போன்றும் இந்தக்கதை சித்திரிக்கப்பட்டுள்ளதாம்.
இத்தொடரின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இத்தொடரின் நாயகி சாய் தன்ஷிகா, தாம் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த என்னைக் கண்ட பலரும் ஒரு கேள்வியை மறக்காமல் கேட்டனர். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. ஏன் நீங்கள் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை, தமிழை அறவே மறந்துவிட்டீர்களா என்பதுதான் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி.
“அந்தக் கேள்வியை முதலில் கேட்டபோது என் மனதுக்குள் வருத்தமாக இருந்தது. எனினும் ரசிகர்கள் என்னை மறக்கவில்லை என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியும் உண்டானது. என்னைப் பொறுத்தவரை முழுமையான மனநிறைவைத் தரக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
“என் மனதுக்குள் இந்த எண்ணம் மட்டுமே எப்போதும் சுழன்று கொண்டிருக்கும். அதனால்தான் பொறுமையாக காத்திருந்தேன். அந்த காத்திருப்புக்கான பலனாகத்தான் இயக்குநர் நாகாவின் அற்புதமான குழுவில் என்னால் இணைய முடிந்தது.
“உங்கள் முன் நின்றுகொண்டிருக்கும் இந்த நொடியில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளேன்,” என்றார் சாய் தன்ஷிகா.
ஐந்தாம் வேதம் என ஒன்று இருந்தால், அது எப்படி இருக்கும், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை விவரிக்கும் விதமாக, இந்த இணையத்தொடர் உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இத்தொடர் அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“எல்லா காலகட்டத்திலும், ஒரு நடிகைக்கு மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களை ஊக்கப்படுத்த, வழிகாட்ட ஒருவர் தேவை. எனக்கு அப்படிப்பட்ட இயக்குநர்கள் பலர் வாய்த்தனர். அந்த வகையில், நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்பேன்.
“முன்பு இயக்குநர் ஜனநாதன் வழிகாட்டினார் எனில் இப்போது இயக்குநர் நாகா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த வழிகாட்டிகளுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
“நீண்ட நாள்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு இத்தொடரை உருவாக்கி உள்ளோம். இந்த உழைப்பு நிச்சயம் பேசப்படும்,” என்கிறார் சாய் தன்ஷிகா.
இவர் ரஜினியுடன் ‘கபாலி’, ‘இருட்டு’, ‘பரதேசி’, ‘அரவான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவரது சிறப்பான நடிப்பைக் கண்ட ரஜினி அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். எனினும், தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு தேசம் பக்கம் ஒதுங்கினார் சாய் தன்ஷிகா.
மீண்டும் தற்போது இணையத்தொடர் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த சுற்றைத் தொடங்கியுள்ளார்.