தமிழ்த் திரையுலகில் மக்கள் திலகம் எம்ஜிஆரைப் போல் பெயர் பெற்ற நடிகர் கிடையாது. அதுபோல், சாண்டோ சின்னப்பா தேவரைப் போல் திரைப்படத் தயாரிப்புத் துறையில் சம்பாதித்தவர் எவரும் இல்லை எனலாம். அதிலும் எம்ஜிஆரை வைத்து அவர் தயாரித்த படங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. எப்படி என்று கேட்கிறீர்களா?
சின்னப்பா தேவர் தொடக்கக் காலத்தில் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தனது உடல்வாகை வைத்து சண்டைக் காட்சிகளில் நடித்துப் பிரபலமானார். அதுபோல் எம்ஜிஆரும் ‘மதுரை வீரன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மன்னாதி மன்னன்’, ‘சக்ரவர்த்தித் திருமகள்’ என பெரும்பாலும் ராஜா-ராணிப் படங்களில்தான் நடித்து வந்தார்.
எம்ஜிஆர் நடித்து 1947ஆம் ஆண்டு வெளிவந்த படமான ‘ராஜகுமாரி’யில் வில்லனாக நடித்தார் சின்னப்பா தேவர். இருவருக்கும் அப்பொழுது ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியாகத் தனது படங்களில் சின்னப்பா தேவருக்கு எம்ஜிஆர் வாய்ப்புப் பெற்றுத் தந்தார்.
பின்னர் 1956ஆம் ஆண்டு தேவர், தனது தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி எம்ஜிஆரையே அதில் நடிக்குமாறு அழைத்தார். தேவர் எம்ஜிஆரை வைத்துத் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ பெரும் வெற்றி பெற்றதால் தனது அடுத்தடுத்த படங்களான ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘காவல்காரன்’, ‘விவசாயி’ என நிறைய படங்களை எம்ஜிஆரை வைத்து எடுத்தார்.
ஆனால், எம்ஜிஆர் சில வேளைகளில் படப்பிடிப்புக்கு நேரத்துடன் வருவதில்லை. எதையும் கனகச்சிதமாக முடிக்கும் தேவருக்கு இது பிடிக்காது.
அதே சமயம் எம்ஜிஆரை அவர் நேரடியாகத் திட்ட மாட்டார். இப்படித்தான் ஒரு சமயம் எம்ஜிஆரை குத்திக் காட்டும் விதமாக அருகில் இருந்த நடிகர் அசோகனைக் காரணமின்றி, “ஏண்டா ஒழுங்கா பணம் வாங்கிக் கொள்கிறாய் இல்லையா, படப்பிடிப்புக்கு நேரத்துடன் வர முடியாதா,” என்று கடிந்துகொண்டார். அசோகனுக்கும் அது எம்ஜிஆரைக் குறித்து சொல்லப்பட்டது என்று தெரியும். அதுபோல் எம்ஜிஆருக்கும் அது தன்னைக் குறித்துதான் தேவர் சொல்கிறார் என்று தெரிந்தாலும் அவரும் அமைதியாக இருந்தார்.
இருவரும் இப்படி நடந்துகொள்வதற்கு காரணம், இருவருமே ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த மரியாதையே. அதற்குக் காரணம் இதுதான். ராஜா-ராணிப் படங்களில் மட்டுமே நடித்து வந்த தன்னை சமூகப் படங்களில் நடிக்க வைத்து ஏற்றம் தந்தார் என தேவர் மீது எம்ஜிஆருக்கு அளவு கடந்த மரியாதை. அதேபோல், சாண்டோவாக இருந்த தன்னை நடிகராக உயர்த்தி தான் தயாரித்த படங்களை வெற்றிப் படங்களாக தந்த எம்ஜிஆர் மீது சின்னப்பா தேவருக்கு அளவிட முடியாத மரியாதை.
இப்படி ஒருவருக்கு ஒருவர் மரியாதை தந்து பட உலகில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு சமயம் தேவர் தயாரித்த படத்தின் இறுதிக் காட்சிகளைப் படமாக்கி, திரையிட நாளும் குறிக்கப்பட்ட நிலையில், எம்ஜிஆர் தனது சொந்தத் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ படக் காட்சிகளை எடுக்க ராஜஸ்தான் சென்றுவிட்டார். அங்கிருந்து தேவரைத் தொடர்புகொண்டு “அண்ணே, படத் திரையீட்டு நாளை ஒரு பத்து நாள்களுக்கு தள்ளிப் போடுங்கள், நான் திரும்பி வந்து நடித்துத் தருகிறேன்,” என்று சொன்னார். இதைக் கேட்ட சின்னப்பா தேவருக்கு கோபம் பொங்கி எழுந்தது.
தொடர்புடைய செய்திகள்
அப்பொழுது, “நீங்கள் வரவில்லை என்றால் ஒரு நாயை வைத்தாவது அந்தக் காட்சிகளை நான் முடித்துவிடுவேன். திரையீட்டு நாளை ஒத்திவைக்க முடியாது,” எனக் கூறிவிட்டார் தேவர். பிறகு என்ன, எம்ஜிஆர் அவசர அவசரமாக சென்னைக்குத் திரும்பி வந்து படத்தை முடித்துக் கொடுத்தார்.
இதற்குப் பின் தேவர், எம்ஜிஆரைத் தவிர்த்து முருகப் பெருமானைச் சிறப்பிக்கும் வகையில், ‘துணைவன்’, ‘தெய்வம்’, ‘திருவருள்’, ‘முருகன் அடிமை’ போன்ற படங்களை எடுத்தார்.
இப்படியிருக்கையில், இந்தித் திரையுலகில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்ற பெரும் வெற்றிப் படத்தைத் தமிழில் எடுத்தபோது எம்ஜிஆர், சின்னப்பா தேவரை அழைத்து, “அண்ணே இந்த ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு தேவரும் சம்மதித்து தமிழில் ‘நல்ல நேரம்’ என்ற படத்தை எடுத்தார். அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது.