தோழி வீட்டில் நள்ளிரவு சம்பவம்; பவ்யாவின் திகில் அனுபவம்

2 mins read
1fe4857d-862b-4448-808a-67a02eb4f283
பவ்யா திரிகா. - படம்: ஊடகம்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ். இவருடன் பவ்யா திரிகா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜின் - தி பெட்’.

டி.ஆர். பாலா இயக்கி உள்ளார். இதில் ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விவேக், மெர்வின் இசையமைக்க, நகைச்சுவையும் திகிலும் நிறைந்த படமாக உருவாகி உள்ளது.

வரும் 30ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாயகி பவ்யா திரிகாவின் பேச்சு பலரையும் கவர்ந்தது.

“கடந்த 2022, நவம்பர் 20ஆம் தேதி என் தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய தோழிகள் ‘ஜின்’ என்ற ஒரு விஷயம் குறித்து சொன்னார்கள். அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை.

“ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனை அடிக்கடி சொல், அதனுடைய சக்தி கிடைக்கும் என்றார்கள். அதையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

“பின்னர் தோழி வீட்டிலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அந்தத் தருணத்தில் என் முதுகுக்குப் பின்னால் இருந்து ‘பவ்யா’ என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயந்துவிட்டேன்.

“அதன் பிறகு அடுத்த நாள் என்னுடைய சமூக ஊடகப் பக்கத்தைப் பார்த்தால் அதிர்ச்சி. அப்போது ஜின்ஷா என்ற பெயரில் யாரோ ஒருவர் நிறைய ‘லைக்’குகளைப் போட்டு கவனத்தைக் கவர்ந்தார். இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது.

“உடனடியாக கோவில், தேவாலயம், பள்ளிவாசல், குருத்வாரா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தேன். மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு ஒரு பட வாய்ப்பு வருகிறது. கதையின் தலைப்பைக் கேட்டால் ‘ஜின்’.

“இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார். அப்போது ஜின் குறித்து எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.

“அதனால்தானோ என்னவோ, இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன்,” என்றார் பவ்யா.

“இயக்குநர் பாலா மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். படப்பிடிப்புத் தளத்தில் அவர் நட்பாகப் பழகக்கூடியவர். கலைஞர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். அது எனக்குப் பிடித்திருந்தது.

“எனவே, படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமல்ல, படத்தில் நடிக்கும்போதும் இயல்பாக இருந்தேன். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“இந்தப் படத்தில் நல்ல, நேர்மறையான அம்சங்கள் பல உள்ளன. ஜின் என் வாழ்க்கையில் தேவைப்படும் ஆசியை வழங்கி இருக்கிறது.

“நல்ல குடும்பப் படைப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அனைவரும் திரையரங்கத்திற்கு வந்து படத்திற்கு ஆதரவு தாருங்கள்,’‘ என்றார் பவ்யா திரிகா.

குறிப்புச் சொற்கள்