தமது 54வது பிறந்தநாளை ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி, பத்ம பூஷன் விருது எனப் பல சிறப்பு அம்சங்களோடு இன்று (மே 1) கொண்டாடி வருகிறார் நடிகர் அஜித்.
அவரைப் பற்றிப் பலர் அறியாதப் புதிய தகவல்களையும் அண்மையில் அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில துணுக்குகளையும் இதில் காணலாம்.
தமது வீட்டில் நெடுங்காலமாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை அவர்களுக்கே உரிமையாக்கி பத்திரப்பதிவும் செய்து கொடுத்திருக்கிறார் அஜித்.
ஆன்மீகம், ராசி, ஜோதிடம் பார்ப்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டாம். ஆனால் ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையையும் பின்பற்றி வருகிறார்.
தமது நம்பிக்கையை மற்றவர்களிடம் திணிக்கும் பழக்கமற்றவராம்.
விதவிதமான மோட்டர்சைக்கிள்களைச் சேகரித்து வைத்திருக்கும் அவர், நினைத்தபோதெல்லாம் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறாராம்.
காணொளி கருவிகள்மீதும் காதல் உண்டாம். நண்பர்களையும் கூட நடிக்கிற எளிய நடிகர்களுக்கும் புகைப்படம் எடுத்துக்கொடுத்து மகிழ்ச்சியாகப் பழகுவது அவரது இயல்பான குணங்களில் ஒன்று.
இந்நிலையில், ‘பத்ம பூஷண் விருது’ பெற்ற பிறகு அளித்த நேர்காணலில், ”நான் இன்னும் மனதளவில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபராகத் தான் இருக்கிறேன். பத்ம பூஷண்’ விருது பெற்றவுடன் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இது போன்ற விருதுகள் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “என் பெயருக்கு முன்னால் உள்ள எந்தவொரு பெயரையும் ஏற்பதில்லை. அஜித் அல்லது ஏகே என்று அழைக்கப்படுவதை விரும்புகிறேன். நடிப்பது என்பது ஒரு வேலை. என் வேலைக்கு நான் சம்பளம் வாங்குகிறேன்,” என ‘சூப்பர் ஸ்டார்’, ‘தல’ ஆகிய பட்டங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.