சென்னை: கொரோனா காலத்தில் இறந்த, டாக்டரின் குடும்பம் குறித்து, சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் தவறான தகவல் தெரிவித்ததாகக் கூறி அரசு மருத்துவர்கள் மற்றும் மறைந்த மருத்துவரின் குடும்பத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியபோது, “கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்தவர் அரசு மருத்துவர் விவேகானந்தன். இவரது மனைவி அரசு வேலை கேட்டு, தன் குழந்தைகளுடன், அமைச்சர் சுப்பிரமணியனை மூன்று முறை நேரில் சந்தித்து வேலை வேண்டினார்.
ஆனால், அமைச்சர் கருணை காட்டவில்லை. மக்கள் உயிரைக் காப்பாற்ற போராடி இறந்த, மருத்துவரின் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை கேட்டு, உண்ணாவிரதம் இருந்தோம்.
அமைச்சர் மனம் இரங்கவில்லை. நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு வேலை வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதி கிடைக்கவில்லை.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு, உடனடியாக, 10 லட்சம் ரூபாய் அரசு கொடுக்கிறது. ஆனால், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தைக் கண்டு கொள்ளவில்லை.
விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்படாதது குறித்து, தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ., வானதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘விவேகானந்தனுக்கு இரண்டு மனைவியர். அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை உள்ளது’ என தவறான தகவலை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது அதிர்ச்சியாக உள்ளது. ஒரு வாரத்தில் வேலை தருவதாகக் கூறி, நான்காண்டுகள் கடந்தும் வேலை வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, உடனடியாக விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்,” என்று கூறினார்.
பேட்டியின்போது, மறைந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவி திவ்யா மற்றும் குழந்தைகள் உடனிருந்தனர்.