தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை திவ்யா துரைசாமி. தமிழ்ச் செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வந்தார் நடிகை திவ்யா துரைசாமி. தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகி தற்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘வாழை’ திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் திவ்யா துரைசாமி.
இவருடைய நேர்த்தியான நடிப்பைப் பார்த்த பலரும் அவருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் நடிகை திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“இன்னும் நிறைய திரைப்படங்களில் நீங்கள் இதே போன்ற நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் இருவரும் இணைந்தும் திரைப்படங்களில் தொடர்ச்சியாகவும் பணியாற்றுவோம். மாரி செல்வராஜ் உன்னுடைய கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கியுள்ளார். அன்று மேடையில் எல்லோரையும் என்னால் தனித்தனியே பாராட்ட முடியவில்லை, அதனால் தான் இன்று உன்னை நேரில் அழைத்து பாராட்டுகிறேன்,” என்று கூறி தனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் நடிகை திவ்யா துரைசாமிக்கு இயக்குநர் மிஷ்கின் வழங்கியுள்ளார்.
மேலும், நீங்கள் மிகவும் பெருமையாக உணர வேண்டும். நீங்கள் தமிழ்த் திரையுலகின் சிறந்த படத்தில் நடித்துள்ளதாகவும் இது மாரி செல்வராஜின் அற்புதமான படைப்பு எனவும் பாராட்டியுள்ளார். அப்படத்தில் நடித்த சிறுவன் கலையரசன் ஆகியோரின் நடிப்பும் அருமையாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தான் நடித்த ‘வாழை’ படத்தைப் பார்த்துவிட்டு இரண்டு முறை அழுததாக செய்தியாளர்களைச் சந்தித்த திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “எனக்கு வாழை படம் மிகவும் முக்கியமான படம். என்னுடைய திரையுலகப் பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படம் இது என்று சொல்வேன்,” என்றார் திவ்யா.
மேலும், “வாழை படத்தை நானும் இரண்டு முறை பார்த்தேன். இரண்டு முறையும் நிறைய அழுதேன். அதைப்போலப் படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் எடுக்கும்போது படப்பிடிப்புத் தளத்திலும்,” என்றார் இவர்.

