‘பாட்டல் ராதா’ திரைப்பட நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தனது பேச்சில் மிஷ்கின் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் இளையராஜாவை ஒருமையில் பேசியதாகவும் கூறப்பட்டது. இதற்கு பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தான் பேசியதற்கு ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மேடையில் மிஷ்கின் மன்னிப்பு கேட்டார்.
“நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அதில் ஓரிரு வார்த்தைகள் எல்லைமீறி சென்றுவிட்டன. குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை, அந்த எண்ணமும் எனக்கு இல்லை,” என்றார் மிஷ்கின்.
இதற்கிடையே, மிஷ்கினின் பேச்சைப் பற்றியும் அவர் மன்னிப்பு கேட்டது குறித்தும் விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு,“மிஷ்கினுக்கு இதே வேலை. ஏதாவது தவறாகப் பேசுவார், பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்பார். சில பேரின் சுபாவத்தை மாற்ற முடியாது,” என்றார் விஷால்.

