ஹாலிவுட் திரையுலகில் இருந்து நிறைய வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் அவற்றைத் தாம் தவறவிட்டதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார்.
“இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு உலக அளவில் புகழும் அங்கீகாரமும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ‘ஜெய் ஹோ’ பாடல் மூலம், எனக்கு அது கிடைத்தது.
“ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தன. வெளிநாட்டவர்களும் என் இசையை ரசித்துப் பாராட்டியது என்னை நெகிழ வைத்தது.
“அந்தச் சமயத்தில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், ஏற்கெனவே பல படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்தேன். மேலும், கொஞ்சம் ஓய்வும் தேவைப்பட்டதாக உணர்ந்தேன்.
“எனவே, ஹாலிவுட் வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். உலக அரங்கில் என்னைக் கொண்டு செல்லவிருந்த அந்த நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதாகவே இப்போது தோன்றுகிறது.
“ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசையை மூன்றே வாரங்களில் முடித்தேன். அதன் பிறகு ஆஸ்கருக்கு அனுப்பினோம். ‘ரோஜா’ படம் எப்படி என்னை மக்களிடம் கொண்டு சேர்த்ததோ, அதேபோல ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ உலக அரங்கில் எனக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது,” என்று ஏ.ஆர்.ரகுமான் பேட்டியில் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு திறமையான பாடகர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்றும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணிகளை விரைவாக முடிக்கலாமே தவிர, அதுவே அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிட இயலாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“அதேசமயம் ‘ஏஐ’ செலவுகளைக் குறைக்கிறது. ஓர் அறையில் உட்கார்ந்தபடியே ஒரு முழு திரைப்படத்தையே எடுத்துவிடும் அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
“குழந்தைகளுக்கு இத்தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏஐ மூலம் ஒரு கதையைக் காட்சி வடிவாக உருவாக்கச் சொல்லி கற்றுக் கொடுக்கலாம், சிறு சிறு பயிற்சிகள் கொடுக்கலாம்,” என்று ஏ.ஆர்.ரகுமான் மேலும் தெரிவித்துள்ளார்.

