‘மாடலிங்’, ‘சினிமா’ இரண்டும் வெவ்வேறு உலகங்கள்: வின்சு ரேச்சல்

3 mins read
eebc1c3e-6223-4d01-9cff-e12bde839940
நடிகை வின்சு ரேச்சல். - படம்: ஊடகம்

பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பிரபல மாடல் அழகியான வின்சு ரேச்சல்.

பதற்றமின்றி ஒவ்வொரு நொடியையும் ஜாலியாக வாழ்ந்து பார்க்க ஆசைப்படுவதாகக் கூறும் இவர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ‘ஜோக்’ அடித்துச் சிரிப்பேன், குறும்பாக சேட்டைகளும் செய்வேன் என்கிறார்.

மற்றபடி ஆஹா, ஓஹோ என்று சொல்லுமளவுக்கு நான் ஒரு பெரிய நட்சத்திரமெல்லாம் கிடையாது என்றும் தன்னடக்கத்துடன் பேசுகிறார் வின்சு ரேச்சல்.

‘மாடலிங்’, ‘சினிமா’ இரண்டும் வெவ்வேறு உலகங்கள் என்று கூறும் ரேச்சல், நடிப்பை பொறுத்தவரை விளம்பரங்கள் என்றால் மிகைப்படுத்தி நடிக்க வேண்டும், சினிமாவுக்கு கொஞ்சம் அடக்கி வாசித்தால் போதும். நமக்கு அமையும் பாத்திரத்தைப் பொறுத்து நடிப்புத் திறனும் மாறுபடும் என்று விளக்கம் அளிக்கிறார்.

தமிழக வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், தனது ‘மாடலிங்’, திரையுலகப் பயண அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

“பொதுவாக, வாழ்க்கை எப்போதும் ஒரு ரோஜா படுக்கைபோல் இருக்காது என்பார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

“எனது வாழ்க்கையிலும் அவ்வப்போது பல சிக்கல்களைச் சந்திக்கிறேன், போராடுகிறேன், மீண்டு வருகிறேன்.

“எனினும், சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியோடு ஓடிக்கொண்டிருக்கிறேன்,” என்கிறார் ரேச்சல்.

“மணிரத்னத்தின் இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதையில், அதிரடி நடிப்பில் தூள் கிளப்ப விரும்புவதாகச் சொல்லும் ரேச்சல், அவருடைய படங்களில் பெண்களைச் சக்தி வாய்ந்த பாத்திரங்களாகச் சித்திரித்திருப்பார். அதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும்.

“எனது முன்மாதிரி என்று சொன்னால், நயன்தாராவை சொல்வேன். அவருடைய பயணம் எப்போது நினைத்தாலும் என்னை வியக்க வைக்கும். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துக்கேற்ப தனது கதாபாத்திரங்களை உயிர் பெறச் செய்யும் அற்புதமான நடிகை,” என்று புகழாரம் சூட்டுகிறார்.

மலையாளக் கரையோரத்திலிருந்து வந்துள்ள இவர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ படத்திலும் நடித்துள்ளார்.

அப்பாவுக்கு துபாயில் வேலை என்பதால் சிறு வயது முதலே விமானத்தில் பறக்க ஆரம்பித்து விட்டதாகக் கூறும் இவர், கல்லூரியில் படிப்பதற்கு ஆசைப்பட்டு 2008ல் சென்னைக்கு வந்துள்ளார்.

நான் மட்டும் நடிக்க வராமல் இருந்திருந்தால் இந்நேரம் ஏதாவது ஒரு கல்லூரியில் பாடம் நடத்திக்கொண்டு இருந்திருப்பேன் என்று சொல்கிறார்.

கல்லூரி நாள்களிலேயே ‘மாடலிங்’ துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டேன். மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துப் பார்த்து நானும் அவர்களைப் போல் வருவதற்கு ஆசைப்பட்டேன்.

என் பெற்றோருக்கு என் மீது நம்பிக்கை அதிகம் என்பதால் எனது திரையுலகப் பயணத்துக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.

‘மாடலிங்’ துறையில் எனக்கென்று நல்ல பெயர் உள்ளது. ஏராளமான நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறேன். விளம்பரங்கள் எவ்வளவு பண்ணியிருப்பேன் என்று தெரியவில்லை.

ஏனெனில், கடந்த பத்து ஆண்டுகளாக விளம்பரங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறேன். அண்மையில்தான் குளியல் சோப் விளம்பரத்துக்காக தாய்லாந்து சென்று வந்தேன் என்கிறார் ரேச்சல்.

பா.இரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் அதியன் ஆதிரை ‘தண்டகாரண்யம்’ வாய்ப்பைக் கொடுத்தார். இந்தப் படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிட்டியது.

இப்போது நான் பேசும் தமிழ் நன்றாக உள்ளது என்று சொல்வதற்கு இயக்குநர் அதியன்தான் காரணம்.

நிஜத்தில் நான் நவீன பாணியிலான ஆடைகளை அணிந்துகொள்வேன். ஒரு பாத்திரத்துக்காக பாவாடை, தாவணி போடவேண்டும் என்று கூறினர். எனக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத ஆடையை அணிவதற்கு இயக்குநர் அதியன் எப்படி என்னைத் தேர்வு செய்தார் என ஆச்சர்யமாக இருந்தது. அது என்ன மாயமோ பாவாடை, தாவணி போட்டதும் கிராமத்துப் பெண்ணாக என்னை நினைத்துக் கொள்ள முடிந்தது என ‘தண்டகாரண்யம்’ பட நினைவுகளைப் பகிர்கிறார் ரேச்சல்.

குடும்பம், நண்பர்கள், படக்குழுவினர் என என்னைச் சுற்றிலும் எப்போதும் ஒரு நேர்மறையான சூழல் நிலவுவதால்தான் தன்னால் நிம்மதியாக நடிப்பில் கவனம் செலுத்த முடிவதாகவும் சொல்கிறார் வின்சு ரேச்சல்.

குறிப்புச் சொற்கள்