கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ளது ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம்.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ரித்தி ‘என்ற’ பாடல் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கதைக்குப் பொருத்தமாக இருந்ததால்தான் இந்தத் தலைப்பை வைத்தனராம். தொடக்கத்தில் ‘சாவித்திரி பிஏபில்’ என்ற தலைப்புதான் பரிசீலிக்கப்பட்டதாகச் சொல்கிறார் இயக்குநர் பிரவீன் எஸ். விஜய்.
தலைப்பை மாற்றிய பிறகு மிகப் பொருத்தமாகவும் கதைக்கு கூடுதல் வலுசேர்ப்பதாகவும் அமைந்துவிட்டதாகச் சொல்கிறார்.
புராணத்தில் வரும் ‘சத்தியவான் சாவித்திரி’ கதையின் நவீன பதிப்புதான் இப்படத்தின் கதையாம். இனி இயக்குநர் சொல்வதைக் கேட்போம்.
கீர்த்தி சுரேஷ்தான் நாயகி என்று கதை எழுதும்போதே முடிவு செய்திருந்தீர்களா?
“சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பணியாற்றும்போது கீர்த்தியின் நட்பு கிடைத்தது. அந்தப் படத்தில் வந்த காட்சிகளை நிறைய பார்த்திருப்போம். அதில் வராத காட்சிகள் சில உண்டு.
“அதாவது, ஒரே காட்சியைப் பலமுறை படமாக்குவோம். வணிக ரீதியிலாக அல்லாமல், அதில் அவரது நடிப்பு உணர்வுபூர்வமான கதைகளுக்குப் பொருந்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
“அதன் பின்னர் ‘மகா நடிகை’ போன்ற படங்கள் அவரது நடிப்புக்குத் தீனிபோடுவதாக அமைந்தன. இந்தக் கதையின் சுருக்கத்தை உறுதி செய்ததும், கீர்த்தியை வைத்து கதையை விரிவாக எழுதலாம் என்று தோன்றியது. தொடக்கத்தில் இருந்தே இதுவரை அவரை மனத்தில் வைத்துத்தான் எழுதியுள்ளேன்.
“கதை எழுதியதும் அவரை எப்படியாவது படத்துக்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். பல நல்ல உள்ளங்களின் உதவி, தெய்வ அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. கீர்த்தியின் அடுத்த பாய்ச்சலை இதில் பார்க்கலாம்.
இயக்குநர், நடிகர் மிஷ்கின் குறித்து?
“ஒரு நடிகராகப் பல படங்களில் மிஷ்கினின் நடிப்பைப் பார்த்திருப்போம். நீதிமன்றம், வழக்கறிஞர் என்பது வேண்டுமானால், புது விஷயமாக இருக்கலாம்.
“அவருடைய படங்களில் கதாபாத்திரத்துக்கான புரிதல், வசனம் அழுத்தமாக இருக்கும். உதாரணத்திற்கு, அவர் இயக்கிய படம் ஒன்றில், உடற்கூராய்வு செய்யும் மருத்துவர் சுடப்படுகிறார். தோட்டா இவ்வளவு வேகத்தில் பாய்ந்திருந்திருந்தால்தான் உடலில் அந்த அளவு ஆழத்தில் குண்டு துளைத்திருக்கும் என்றும் எவ்வளவு தூரத்திலிருந்து சுட்டிருப்பார்கள் என்றும் தனக்கு அடிபட்டிந்தால் அச்சமயம் சொல்லக்கூடிய அளவுக்கு அந்த மருத்துவர் கதாபாத்திரம் பற்றிய புரிதல் ஒரு இயக்குநராக அவரிடம் வெளிப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் புரிந்து எழுதக் கூடியவர் என்பதால் நடிகராக அவர் அவதாரம் எடுக்கும்போதும் அவர் பேசும் வசனங்கள் அழகாய் வெளிப்படும்.
“இந்தப் படத்தையே எடுத்துக்கொள்வோம். நீதிமன்ற விசாரணைக்கூடம் எப்படி இருக்கும் என்பது முக்கியம். அவரிடம், ‘இதுதான் உங்கள் பகுதிக்கான காட்சி அமைப்பு, உங்களுக்கான வசனங்கள். உங்கள் பாணியில் பேசுங்கள்’ என்று அவரிடம் சொல்வேன். அவர் மிஷ்கினாகவே இருந்ததால் பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார்.

