லண்டனில் சிம்பொனி இசையில் புதிய சகாப்தம் படைத்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா, கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்.
இளையராஜாவின் இஷ்ட தெய்வம் தாய் மூகாம்பிகை. இந்தக் கோவிலுக்குச் சென்று வந்த பிறகுதான் ஆன்மிகத்திலும் காவி உடை அணிவதிலும் தீவிரமாக ஈடுபட்டார் இளையராஜா.
இதனால் சினிமா வட்டாரத்தில் ரஜினி முதல் பலரும் ராஜாவை ‘சாமி’ என்றே அழைத்து வந்தனர்.
1982ஆம் ஆண்டு வெளியான ‘தாய் மூகாம்பிகை’ திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் ஆதி சங்கரர் பாடுவதாக அமையப்பெற்ற ‘ஜனனி... ஜகம் நீ’ பாடல் அமைதியைத் தேடும் ஆன்மிக நெஞ்சங்களுக்கு இன்றளவும் நிம்மதியைத் தந்துகொண்டிருக்கிறது.
கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை இளையராஜா பாடியிருந்தார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை உண்டு.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் தாயார் மிகச் சிறந்த மூகாம்பிகை பக்தை. இதனால் எம்ஜிஆருக்கும் மூகாம்பிகை பக்தி அதிகம் உண்டானது. அடிக்கடி அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடுவார்.
இந்த கோவிலில் ஆதிசங்கரர் தியானம் செய்த அறை ஒன்று உண்டு. அங்கே அமர்ந்து தியானம் செய்வது எம்ஜிஆரின் வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர் தாய் மூகாம்பிகையை வேண்டிக்கொண்டார்.
எம்ஜிஆர் நலம் பெற்றதும் எம்ஜிஆர் சார்பில் தங்க வாள் ஒன்றை நேர்த்திக்கடன் செலுத்தினார் ஈடுபட்டார் ஜானகி. அந்த வாள் இன்றும் அம்மனின் கையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
நள்ளிரவில் கோவிலில் மங்கல ஆரத்தி நிகழும்போது இந்த வாள் கோவிலுக்குள் ஒரு சுற்று கொண்டுவரப்படும்.
எம்ஜிஆரின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கே.சங்கர், ‘தாய் மூகாம்பிகை’ படத்தையும் இயக்கினார். எம்ஜிஆரை சங்கர் சந்திக்கும் போதெல்லாம் தாய் மூகாம்பிகை படத்தைப் பற்றி விசாரிப்பார் எம்ஜிஆர்.
அப்படி ஒரு முறை, “இந்தப் படத்துக்கு கவிஞர் வாலி ‘ஜனனி ஜகம் நீ’ என்ற அருமையான பாடலை எழுதியிருக்கிறார். இளையராஜா சிறப்பாக மெட்டு போட்டிருக்கிறார். இந்தப் பாடலைப் பாட ஜேசுதாசைக் கேட்டோம். அவரால் இயலாமல் போனது. ஆனால் இளையராஜாவோ, ‘தான் அந்தப் பாடலைப் பாடுகிறேன் எனக் கேட்கிறார்,” என்று சங்கர் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட எம்ஜிஆர், “இது முக்கியமான பாடல். ஜேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும். ஆனாலும் யார் பாட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்றாராம்.
இயக்குநரைச் சம்மதிக்க வைத்து இளையராஜா அந்தப் பாடலைப் பாடினார். அதன்பின்னர், பதிவு செய்யப்பட்ட பாடலை எம்ஜிஆர் கேட்டார்.
“மிகவும் தெய்வீகமாக உள்ளது,” எனப் பாராட்டினார் எம்ஜிஆர்.
இந்தப் பாடல் இந்தப் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்தது. இது ஒரு வகையில் தன் பக்தன் இளையராஜாவுக்காகத் தாய் மூகாம்பிகை செய்த சாதகம் என்றே சொல்ல வேண்டும்.
இந்தத் தகவலை பழைய பேட்டி ஒன்றில் கே.சங்கர் தெரிவித்திருந்தார்.