திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால்

2 mins read
777f1063-3ed5-47c7-984e-c302e035e83c
நடிகர் திலீப் படத்தில் விஜய் பற்றி அதிகம் பேசி நடித்த மோகன்லால். - படம்: கோலிவுட் கிளிட்ஸ்
multi-img1 of 2

மலையாளத் திரையுலகிலும் அங்குள்ள முன்னணி நடிகர்களுக்குச் சமமாக நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள பிரபலங்கள் பலரும், தங்களை விஜய்யின் ரசிகர்கள் எனப் பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.

அதை நிரூபிப்பதுபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான திலீப் - மோகன்லால் இணைந்து நடித்த ‘பயம் பக்தி வெகுமானம்’ திரைப்படத்தில், படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை பல இடங்களில் ‘விஜய் புராணம்’ பாடப்பட்டுள்ளது.

அதிலும், சிறப்புத் தோற்றத்தில் நடித்த மோகன்லாலின் கதாபாத்திரப் பெயரே ‘கில்லி பாலா’ என்பதுதான். அதுமட்டுமல்லாமல், தாதாவாக வரும் மோகன்லால் விதவிதமான கார்களைச் சேகரித்து வைத்திருப்பார்.

அதில் ஒரு ஜிப்ஸி (Gypsy) வண்டியும் இடம்பெற்றிருக்கும். இது ‘கில்லி’ படத்தில் பிரகாஷ்ராஜிடம் இருந்து திரிஷாவைக் காப்பாற்றிச் செல்வதற்காக, விஜய் பயன்படுத்திய அதே எண் கொண்ட வண்டி.

இந்தப் படத்தில் அந்த வண்டியை திலீப்பிடம் காட்டும் மோகன்லால், “ஒருமுறை ‘கில்லி’ படப்பிடிப்பின்போது விஜய் என்னுடைய இந்த ஜிப்ஸி வண்டியைப் பார்த்தார். உடனே, தனது படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகச் சொல்லி ஆள் அனுப்பினார். நான் தர மறுத்துவிட்டேன். அதன்பிறகு, அன்றைய இரவு அவரே என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கோரிக்கை வைத்தார். அவரது பேச்சைக் கேட்டதுமே, மற்றவர்களைப் போல நானும் மயங்கிவிட்டேன். உடனடியாக எனது வண்டியை அவரிடம் கொடுத்தேன். அதன்பிறகு அந்தக் ‘கில்லி’ படமும் சூப்பர் ஹிட்டாகி, விஜய் மிகப்பெரிய உயரத்திற்குப் போய்விட்டார்,” என்று ஜிப்ஸி வண்டிக்குப் பின்னால் இருக்கும் ஒரு கதையைக் கூறுவார்.

அதைக் கேட்ட திலீப், “அண்ணா, உங்களைப் பார்த்து நானும் விஜய் ரசிகராக மாறிவிட்டேன்,” என்று சொல்வார்.

இப்படி முன்னணி நட்சத்திரங்கள் இருவர், தாங்கள் விஜய்யின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு படத்தில் நடித்திருப்பது, மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, படத்தைப் பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்