பிரச்சினைக்குப் பணமே காரணம்; தங்கம் ராதாவின் பலவீனம்: அம்பிகா

பிரச்சினைக்குப் பணமே காரணம்; தங்கம் ராதாவின் பலவீனம்: அம்பிகா

ஏஆர்எஸ் கார்டன் சொத்துப் பூசல்: சகோதரிகள் மோதல்
1 of 2
படங்கள்: விகடன்
படங்கள்: விகடன்

25 Sep 2026 - 3:21 pm

2 mins read

ஏஆர்எஸ் கார்டன் சொத்து, காசோலை விவகாரத்தில் நடிகைகள் அம்பிகா, ராதாவுக்கு இடையே கடும் பூசல் மூண்டுள்ளது.

ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாகத் தனது சகோதரி அம்பிகாமீது நடிகை ராதா சென்னைக் காவல்துறை ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.

இக்குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அம்பிகா, “சொத்துப் பிரச்சினையைத் தீர்க்கவே ராதா எனக்குக் காசோலைகளை வழங்கி, பின்னர் அதனை நிறுத்திவைத்தார்,” என்றார்.

மேலும், “ராதாமீது புகார் கொடுத்தால் அவர்தான் சிறை செல்ல நேரிடும்; தங்க நகைகள் மீதான அளவுக்கதிகமான ஆர்வம் அவரது பலவீனம்,” என்றும் அம்பிகா கூறினார்.

அத்துடன், “ஏஆர்எஸ் கார்டன் எங்களுக்கு எம்ஜிஆர் இலவசமாகக் கொடுத்ததன்று; உழைப்பின் மூலம் வாங்கப்பட்ட அச்சொத்துக்கான முக்கியத் தூண் நான்தான்,” என்றும் அம்பிகா தெளிவுபடுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நடிகை ராதா, “தாயார் மறைவதற்கு முன்பே சொத்துகள் பிரிக்கப்பட்டு ஏஆர்எஸ் கார்டன் எனக்குப் பங்காக வந்து சேர்ந்தது. வீட்டுச் செலவுக்காக வழங்கப்பட்ட வெற்றுக் காசோலைகளைத் தவறாகப் பயன்படுத்தி என்மீது அம்பிகா வீணாகப் பொறாமைப்படுகிறார்,” எனக் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “குடும்பச் சொத்தாகத் தனக்குக் கிடைத்த மதிப்புமிக்க சொத்துகளைப் பற்றிப் பொதுவெளியில் பேசாமல் அம்பிகா அதனைக் கவனமாகத் தவிர்த்து வருகிறார்,” என்றும் ராதா சுட்டிக்காட்டினார்.

தன் தம்பி மல்லிகார்ஜுன் இதன் பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும் தன் மகள்களின் எதிர்காலத்திற்காகவே தான் நகைகளைச் சேமித்து வைத்திருப்பதாகவும் நடிகை ராதா மேலும் விளக்கமளித்தார்.

அக்காள் - தங்கை பாசத்தையும் ஒற்றுமையையும் பணம் தோற்கடித்துவிட்டதாக அம்பிகா வருத்தப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக ராதாவிடம் விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னணித் திரைப்படச் சகோதரிகளான இருவரிடையே சொத்துகள், நகைகள் தொடர்பாக மூண்டுள்ள இந்தத் தொடர் சொத்துப் பூசல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பேசும்பொருளாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
காசோலைசொத்துகுற்றச்சாட்டுசிறை