தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி, விஜய்யுடன் நடிக்கும் ‘மாவீரன்’ சகோதரி: மோனிஷாவின் மகிழ்ச்சி அனுபவங்கள்

3 mins read
c1192e33-41be-44c2-b69e-5156002e21ef
மோனிஷா பிளசி. - படம்: ஊடகம்
multi-img1 of 3

‘மாவீரன்’ படம் பார்த்தவர்களுக்கு மோனிஷாவின் முகம் மனதில் பதிந்திருக்கும்.

‘டாப் குக்கு டூப் குக்கு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அழகாகப் பங்களித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது ‘சுழல்-2’ இணையத்தொடரிலும் இயல்பாக நடித்து, தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார் மோனிஷா பிளசி.

அடுத்து, ‘ஜனநாயகன்’, ‘கூலி’ ஆகிய பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

இணையத் தொடரில் ஏற்று நடித்த ‘முப்பி’ தன் மனத்திற்கு மிக நெருக்கமான கதாபாத்திரம் என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மோனிஷா. தொடரைப் பார்த்த பலரும் இவரைப் பாராட்டுகிறார்களாம்.

“பொதுவாக நம் வீட்டில் இருப்பவர்களின் பாராட்டுதான் எளிதில் கிடைத்துவிடாது. ஆனால், அம்மா நான் நன்றாக நடித்திருப்பதாகச் சொன்னபோது மனம் நிறைந்தது.

“குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் முப்பி அதைவிட ஒருபடி மேலான வேடம் எனலாம்,” என்று சொல்லும் மோனிஷாவுக்கு, இத்தொடரில் சண்டைக்காட்சிகளும் உள்ளன.

அதற்காக சண்டைப் பயிற்சியாளர் ஒருவரிடம் சிறப்புப் பயற்சி பெற்றுள்ளார். அப்போது பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டாராம்.

“சண்டைக்காட்சி என்று சொன்னபோது முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால், மீண்டும் எப்போது இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. அதனால் தயக்கத்தை தூக்கிப்போட்டுவிட்டு நடித்தேன்.

“என்னை ‘ஜனநாயகன்’ படப்பூசைக்கு அழைத்தபோது நம்பவே முடியவில்லை. பூசைக்குச் சென்றபோது வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றியது.

“விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. அதை தெரிவித்தபோது, ‘வாங்க’ என்று அவரே அழைத்து தனக்கு அருகே நிற்க வைத்தார். அந்தத் தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. அவருடன் நடிப்பேன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வேன், அவருடன் பேசுவேன் என்றெல்லாம் கனவில்கூட நினைத்ததில்லை.

“ஆனால் இவை எல்லாம் என் வாழ்க்கையில் உண்மையாகவே நிகழ்ந்துள்ளது. அதனால் எனக்கு ஏதோ ஆசிர்வாதம் உள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

“சிவகார்த்திகேயன் அண்ணனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்த பிறகு, எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

“படப்பிடிப்பின்போது அஷ்வின் அண்ணா, சிவா அண்ணா, சரிதா மேடம் என மூவரும் எனக்குப் பலவகையிலும் வழிகாட்டினர். நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதை சரிதா அவர்களிடம் தவறாமல் சொல்லி, அவரது ஆசியைப் பெறுவேன்.

“லோகேஷ் அண்ணா ‘மாவீரன்’ படத்தைப் பார்த்துத்தான் என்னைக் ‘கூலி’ படத்தில் நடிக்க வைத்தார்.

“ரஜினியுடன் படம் எடுத்துக்கொள்ளவும் ஆசை. லோகேஷ் அண்ணாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். சரியாக அவரது பிறந்தநாளன்று அந்த வாய்ப்பு அமைந்தது. அன்று அவருடன் இணைந்து நடிக்கவும் முடிந்தது.

“எப்போதுமே ஒரு விஷயத்தைச் சாதித்துவிட்டால் போதும். மற்ற அனைத்தையும் எளிதில் அடைந்துவிடலாம் என்று நினைப்பேன். ஆனால் வாழ்க்கை அப்படி எளிதாக அமைந்துவிடாது என்பது இப்போது புரிகிறது.

“எதற்கும் காத்திருப்புக் காலம் என்று ஒன்று இருக்கும். அந்தச் சமயத்தில் அமைதியாகத்தான் இருந்தாக வேண்டும்.

“இதுவரை அமைந்த வாய்ப்புகள் எல்லாம் கிடைக்க எனக்கு நிறைய ஆசிர்வாதங்கள் இருப்பதாக நம்புகிறேன். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெயரெடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதை இப்போது மட்டுமல்ல, எப்போதும் செய்வேன்,” என்கிறார் மோனிஷா பிளசி.

குறிப்புச் சொற்கள்