‘இதயம் முரளி’ மூலம் மீண்டும் களமிறங்கும் மோனிஷா

‘இதயம் முரளி’ மூலம் மீண்டும் களமிறங்கும் மோனிஷா

2 mins read
e13c1abb-c1ff-4a30-bb71-37f563759b43
மோனிஷா ரவிசங்கர். - படம்: விகடன்

அதர்வா நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை மோனிஷா ரவிசங்கர்.

தனது அனுபவங்கள் குறித்தும் திரையுலகப் பயணம் குறித்தும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“இப்படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். பல கதாபாத்திரங்கள் இருக்கும் சூழலில் நம் பாத்திரம் தனித்துத் தெரியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது.

“ஆனால் திரையரங்குகளில் படத்தைப் பார்த்துவிட்டுப் பலரும் சமூக ஊடகங்களில் என்னைப் பாராட்டி வருகின்றனர். எனது எதிர்பார்ப்பையும் தாண்டி மக்கள் கொடுக்கும் இந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார்.

தொடர்ந்து தனது நீண்ட இடைவெளிக்கான காரணம் குறித்து விளக்கிய அவர், “எம்பிபிஎஸ் மருத்துவ மேல் படிப்புக்காகச் சென்றதால், எனது உண்மையான பெயரைக் கூட மாற்றிக்கொண்டு அமைதியான ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எம்பிபிஎஸ் படிப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால் அதற்காக முழு உழைப்பையும் கொடுத்தேன்.

“இருப்பினும் மீண்டும் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் தீவிர ரசிகரான இப்படத்தின் இயக்குநர் என்னை அணுகி இந்தக் கதாபாத்திரம் பற்றிக் கூறியபோது, இது சரியான வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியதால், உடனடியாகச் சம்மதித்தேன்,” எனக் குறிப்பிட்டார்.

மருத்துவப் படிப்பை முடித்துவிட்டதால் இனி முழு நேரமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்த மோனிஷா, இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கேமரா முன்னால் நின்ற தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவமாக இருந்தது என்றும் நெகிழ்ந்தார்.

“மாதவனுடன் ‘ஜிடி நாயுடு’ திரைப்படத்திலும் ஒரு முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளேன்.

“இதுதவிர, முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் மேலும் மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன,” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்