இறுதிக்கட்டத்தில் ‘மூக்குத்தி அம்மன்-2’

2 mins read
c3b4058d-a712-465a-bec4-11f893984ee0
‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் சுவரொட்டி. - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.

மேலும் இரண்டு காட்சிகளைப் படமாக்கிவிட்டால் போதுமாம். படத்தை வெளியிட்டுவிடலாம் என்கிறார்கள். மேலும் கணினி சார்ந்த சில பணிகளும் மீதமுள்ளன. அவற்றையும் முடித்து அநேகமாக எதிர்வரும் மார்ச் இறுதிக்குள் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கவுள்ள படத்தின் பணிகளையும் தொடங்கியுள்ளார் சுந்தர் சி.

இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்தை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த சந்தானம், தற்போது சற்று இறங்கி வந்துள்ளார். எனவே, சுந்தர்.சி அழைப்பு விடுத்தால் சந்தானம் நிச்சயம் மறுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, விஷாலுக்கு யார் நாயகி என அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். விஷாலும் சுந்தர்.சியும் இணைந்து பணியாற்றிய ‘ஆம்பள’ படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்திருந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கிய ‘மத கஜ ராஜா’ படத்தில் அஞ்சலி, வரலட்சுமி என இரு நாயகிகள் இருந்தனர்.

இந்நிலையில், விஷாலின் இந்தப் புதிய படத்துக்கு கயாது லோஹர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில் குஷ்புவும் கௌரவ வேடத்தில் நடிப்பாராம்.

இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்க, சுந்தர்.சியின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான அவ்னி தயாரிக்கிறது.

அண்மையில் நடிகர் கமல் தயாரிக்க, நடிகர் ரஜினி நடிக்க, சுந்தர்.சி இயக்குவதாக இருந்த படத்தில் இருந்து அவர் திடீரென விலகினார்.

தற்போது அந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைக் காட்சிகளை விஷால் படத்துக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளாராம்.

ரஜினி படத்துக்காக சந்தானத்திடமும் இந்தக் காட்சிகளை விவரித்து கால்ஷீட் வாங்கி வைத்திருந்தாராம். அது இப்போது அவருக்கு கைகொடுக்கிறது.

குறிப்புச் சொற்கள்