கடந்த ஐம்பது ஆண்டுகளாக திரையுலகில் மிளிர்ந்துகொண்டிருக்கும் பின்னணிப் பாடகி சுஜாதா மோகனின் இனிமையான குரலில் ஒலிக்கும் பல பாடல்களை ரசிகர்கள் எளிதில் மறந்துவிட இயலாது.
‘புது வெள்ளை மழை’, ‘ஒரு இனிய மனது’, ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘ஆத்தங்கர மரமே’ எனப் பல்வேறு வகையான பாடல்கள் ரசிகர்களின் மனதில் ஓர் அமைதியான, ஆத்மார்த்தமான உணர்வை ஏற்படுத்தும் உன்னதக் குரலுக்குச் சொந்தக்காரர் சுஜாதா மோகன்.
திரையிசை உலகில் பொன்விழா கொண்டாடும் இவர், தன்னைப் பொறுத்தவரை 50 என்பது வெறும் எண்ணிக்கைதான் என்கிறார்.
இதுவரை நடந்த அனைத்தும், தமக்குக் கிடைத்த புகழும் இறைவனின் ஆசிர்வாதம் என்று அடக்கத்துடன் குறிப்பிடும் சுஜாதாவின் குடும்பத்தில், இவரைத் தவிர வேறு யாருமே பாடகர்கள் இல்லையாம்.
“என் தந்தை, தாத்தா ஆகியோர் மருத்துவர்கள். அம்மா அரசியல் பின்னணியும் பின்புலமும் கொண்டவர். அம்மாதான் நான் பாடகியாகக் காரணம்.
“அவரது 26வது வயதில் எனது தந்தை காலமாகிவிட்டார். அதன் பிறகு அவருக்கு நான்தான் உலகமாக இருந்தேன். முறைப்படி சங்கீதம் கற்க வைத்தார். கல்லூரி நாள்களில் அவரும் நன்றாகப் பாடுவார் என்பதால் பக்கேற்பாராம். அந்தப் பாடல்களை அழகாகப் பாடிக்காட்டுவார். அதுதான் எனக்குள் பாடும் ஆர்வத்தைத் தூண்டியது. இசைத்துறையில் அம்மாதான் என் முதல் வழிகாட்டி எனலாம்”, எனக் கூறும் சுஜாதா, படிப்பிலும் கெட்டிக்காரராம்.
“கணவரை இழந்த என் அம்மா வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத சூழல். நான் கச்சேரிகளுக்குப் பாடப் போகும்போது பாட்டியையும் சித்தியையும் துணையாக அனுப்புவார். இப்படி என் குடும்பமே ஆதரவாக இருந்ததால்தான் பாடகி சுஜாதாவாக உயர முடிந்தது.
“இளையராஜாதான் தமிழில் ‘கவிக்குயில்’ படம் மூலம் பாடகியாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, ‘காயத்ரி’, ‘ஜானி’ படங்களில் பாடினேன்.
தொடர்புடைய செய்திகள்
“திருமணமான பிறகு இசைப் பயணத்தில் மீண்டும் சிறு இடைவெளி. என் கணவருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வேலை கிடைத்ததால் சென்னை வந்தோம். அதன் பிறகு மீண்டும் நல்ல பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஏ.ஆர்.ரகுமான் மூலம் கிடைத்தது.
“விருதுகள் குறித்து கவலைப்படுவதில்லை. என் பாடல்களை ரசிப்பவர்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்,” என்கிறார் பாடகி சுஜாதா.

