ரஜினி தவறவிட்ட படம்; சக்கை போடு போட்ட பாபநாசம்

2 mins read
48ae70d3-80b2-45c0-94da-67f467adad81
ரஜினி தவறவிட்ட, தமிழில் தயாரிக்கப்பட்ட பாபநாசம் படத்தில் கமல் நடித்தார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரி‌ஷ்யம் திரைப்படம் பலதரப்பில் இருந்தும் வரவேற்பு பெற்று மலையாளத்தில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது.

திரிஷ்யம் படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

தமிழில் கமல், கெளதமி நடித்திருந்தனர். 2015ல் வெளியான இப்படம் அமோகமாக ஓடியது.

இந்நிலையில், அந்தப் படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

“ரஜினி மற்றும் கமல் இருவருமே ‘திரிஷ்யம்’ படத்தை பார்த்தார்கள். தனது வீட்டில் படத்தைப் பார்த்த ரஜினி அரை மணி நேரம் அமைதியாக இருந்தார். அதன் பின்னர் எனக்குப் படம் ரொம்ப பிடிச்சு இருக்கு. ஆனால் ஒரு விஷயம் மட்டும் சந்தேகமாக உள்ளது. என்னை காவல்துறையினர் தாக்குவது போன்ற காட்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என வெளிப்படையாகக் கேட்டார்.

“அதே வேளையில் கமல் படம் பார்த்ததும் ஓகே சொல்லி விட்டார். இதையடுத்து திரிஷ்யம் படத்தை தமிழில் தயாரிக்கும் பணியைத் தொடங்கிவிட்டோம். சில நாட்களுக்குப்பின் ரஜினி சுரே‌ஷிடம் பேசினார். அப்போது, இப்படத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் நடிக்கச் சொன்னார். இப்போது நான் ரெடி என்று கூறினார். ஆனால் கமல் நடிக்கவுள்ளதாகக் கூறியவுடன் ‘ஓகே, ஆல் தி பெஸ்ட்’ எனத் தெரிவித்தார்,” என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்தார்.

திரிஷ்யத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார் ஜீத்து ஜோசப்.

இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ஆனால் தமிழில் ‘திரிஷ்யம் 2’ இன்னும் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.

நீண்ட காலமாகவே இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கச் சொல்லி தமிழ் ரசிகர்கள் கமலிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழில் பார்க்க வேண்டும் என்பதற்காக பலர் திரிஷ்யம் 2 படத்தை மலையாளத்தில் பார்க்காமல் இருக்கின்றனர்.

இதற்கிடையே திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து மூன்றாவது பாகமும் உருவாக இருக்கிறது.

3ஆம் பாகத்துக்கான படப்பிடிப்புகளை இயக்குநர் ஜீத்து ஜோசப் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்