“இன்றைய இளம் தலைமுறையினர் தேவையான சுதந்திரத்தை தாங்களே எடுத்துக்கொள்கிறார்கள். ‘எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சுதந்திரத்தைக் கொடுக்க நீங்கள் யார்’ என்று கேள்வியும் கேட்கிறார்கள்.
“நட்பு குறித்தும் இந்தப் படம் நிறைய பேசும். எங்கோ பிறந்து, வளர்ந்து, சுயநலமே இல்லாமல் வருவதுதான் நட்பு.
“என்னைப் போன்றவர்களை இவ்வளவு தூரம் அள்ளி அணைத்துக் கொண்டு வந்தது நண்பர்கள்தான். இதில் நட்பு குறித்த நல்ல புரிதலுக்கு வித்திடும் காட்சிகள் உள்ளன,” என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை என்ற விமர்சனம் உள்ளது.
இதுகுறித்து கேட்டால், அழகான விளக்கத்தை அளிக்கிறார்.
“இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கை காரணமின்றி அணியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கினர். உச்ச நடிகரான ரஜினியே இரண்டு ஆண்டுகள் படமின்றி வீட்டில் உட்கார்ந்திருந்ததாக ஒருமுறை பேட்டி கொடுத்தார்.
“ஏன் இப்படி நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கை சில செய்திகளை உணர்த்திவிட்டுப் போகிறது என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
“தோல்விகளில் கிடைக்கும் பாடம் வேறு எங்கேயும் கிடைக்காது. இப்போது என் தரப்பில் இருந்த குறைகளைச் சரிசெய்துவிட்டு மீண்டும் களமிறங்கி உள்ளேன்,” என்கிறார் சுசீந்திரன்.
தொடர்புடைய செய்திகள்
‘2கே லவ் ஸ்டோரி’ படத்தில் நாயகன், நாயகி உட்பட பெரும்பாலானோர் புதுமுகங்கள்தானாம். காரணம், புது முகங்களின் நடிப்புதான் ரசிகர்களிடம் கதை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர்களை யதார்த்தத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் என்றும் சொல்கிறார்.
“கதாநாயகன் ஜெகவீர் கிரிக்கெட் வீரர். ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றவர். டோனி, விராட் கோஹ்லி ஆகியோருடன் பயிற்சி பெற்றவர். எனினும், சினிமாதான் தனக்கான துறை என்பதை உணர்ந்த பின்னர் கோடம்பாக்கம் வந்துவிட்டார்.
“என்னுடைய ‘கென்னடி கிளப்’ படத்தில் அறிமுகமான மீனாட்சி கோவிந்தராஜன்தான் கதாநாயகி. தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது,” என்கிறார் சுசீந்திரன்.
‘கென்னடி கிளப்’ படத்தில் மீனாட்சியின் நடிப்பு தமக்கு மிகுந்த மனநிறைவைத் தந்ததாகச் சொல்பவர், விமர்சகர்களும் மீனாட்சியைப் பாராட்டியதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
கோயம்புத்தூர்தான் இப்படத்தின் கதைக்களம். கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து திருமணத்துக்கு முந்தைய காணொளியை எடுத்துத் தரும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படமாம்.
“உறவுகளில் நட்பை அனுபவித்து உணரலாம். ஓர் இளம் பெண்ணும் ஆணும் நட்பாகப் பழகுவதை இந்த உலகம் காதலாகப் பார்க்கிறது. ஆனால், இருவரும் எவ்வாறு நட்பு பாராட்டுகிறார்கள், அந்த நட்பை முன்வைத்து என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன, அதை எப்படித் தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை என்கிறார் சுசீந்திரன்.
சினிமாவில் கதை சாமானியமாக இருந்தால்கூட போதும். திரைக்கதையில் அதை வைத்து மெருகேற்றலாம் என்று குறிப்பிடுபவர், தமது அடுத்த படைப்பில் நட்பின் ஆழத்தைக் காட்சிப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்.
“‘வெண்ணிலா கபடி குழு’ அப்படி என்ன பெரிய கதை? ஒரு சிற்றூரில் உள்ள இளையர்கள், மதுரையில் நடக்கும் கபடிப் போட்டியில் விளையாடச் செல்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஆனால், இக்கதை புகழ்பெற்ற படமாக மாறியது.
“அதேபோல் ‘நான் மகான் அல்ல’ படத்தில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இளையர்களின் முரட்டு முகத்தைக் காண்பித்தோம். அப்படி நட்பின் இன்னொரு பக்கத்தை அலசும் இந்தப் படம் விரைவில் திரைகாணும்,” என்கிறார் சுசீந்திரன்.