‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது அண்மையில் வழங்கப்பட்டது. அவர் பெறும் 7வது தேசிய விருது இது. இந்நிலையில், தான் வென்ற விருதுகள் பற்றியும் தன் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் ரகுமான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதை நாம் இந்தத் திரைச்செய்தியில் காணலாம்.
பொன்னியின் செல்வனுக்காகத் தேசிய விருது வென்றபோது எப்படி உணர்ந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “ரோஜா திரைப்படத்திற்காக முதன்முறையாக தேசிய விருது வென்றபோது, உங்கள் கலைப்பயணத்தில் இந்த விருது மிக விரைவாக கிடைத்துள்ளதாக உணர்கிறீர்களா?,” எனச் செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, அந்த விருது மேலும் தன்னை நெடுந்தூரம் பயணிக்க வேண்டுமென உணர்த்தியதாகக் கூறினேன். அதேபோல, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக அண்மையில் தேசிய விருது வாங்கியபோது நான் முதல்முறையாக அதனைப் பெறுவது போன்று உணர்ந்தேன்,” என்றார் ரகுமான். மேலும், இசைத் துறையில் புதுப்புது மாற்றங்கள் வருவதாகவும் தானும் புதிதாகப் பலவற்றைக் கற்றுக்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தது குறித்து தனது அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும்படி ரகுமானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு “அந்தக் காலகட்டத்தில் பல முயற்சிகள் மேற்கொண்டும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அச்சூழலில் இசையின் மீது முழுக்கவனத்தையும் செலுத்தினேன். அப்போதுதான் ‘ரோஜா’ திரைப்படத்தில் பணியாற்ற மணிரத்னம் வாய்ப்பு வழங்கினார்,” என ரகுமான் தெரிவித்தார்.
‘பொன்னியின் செல்வன்’ போன்று சவாலான திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்த கேள்விக்கு, “இப்படத்திற்கு இசையமைத்தது சிறந்த அனுபவமாக அமைந்தது. இப்படத்திற்காக பல புதிய தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைத்தோம்,” என்றார் அவர்.
அண்மையில், நாகாலாந்து தொடர்பான ஆவணப்படத்தில் பணியாற்றியது குறித்து ஏ.ஆர். ரகுமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தனித்துவமான இசை, மொழி, நடனம், உணவு முறை உள்ளிட்டவை உள்ளன. இவை அனைத்தையும் நம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கமுடியாது. அந்த வகையில், இந்த ஆவணப்படத்தில் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது,” என அவர் பதிலளித்தார்.
குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கலைஞராக தான் இருப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுவதாகவும் கலாசார எல்லைகளுக்கு இசை ஒரு பாலமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.