தமிழ்த் திரையுலகின் அனைத்து முன்னணி நடசத்திரங்களின் முதல் தெரிவாக இருப்பது இசையமைப்பாளர் அனிருத்தான்.
அவர் இசையமைத்த ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது ‘ஹூக்கும்’ உலகச் சுற்றுப் பயணத்தின் அடுத்தகட்டமாக நவம்பர் 30ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாராம் அனிருத்.
‘வேட்டையன்’ படத்தையடுத்து ரஜினியின் ‘கூலி’ படத்துக்கும் கோடம்பாக்கத்தினரால் ‘அனி’ என செல்லமாக அழைக்கப்படும் அனிருத்தான் இசையமைக்கிறார்.
இதையடுத்து, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி, விஜய் தேவரகொண்டா ஆகியோரது படங்களுக்கும் இசையமைக்கும் ‘அனி’, தெலுங்கு தேசத்திலும் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.
அரசியல் மாநாடு நடத்துவதில் மும்முரமாக உள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் ‘விஜய் 69’ படத்துக்கான மூன்று பாடல்களைக் குறித்த நேரத்தில் கொடுத்து பாராட்டு பெற்றுள்ளார் ‘அனி’.
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்.ஐ.கே.’ படம் என மற்ற பட வாய்ப்புகளையும் அனிருத் கைவிடவில்லை. ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் வாங்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் என்கிறார்கள். சென்னை, ஹைதராபாத் எனப் பல இடங்களுக்குப் பறந்து சென்று, ஓய்வின்றி இசையமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறார். இதையடுத்தே, அனிருத்தை ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வெகுவாகப் பாராட்டினார்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.