அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடக்க உள்ளது. கமலா ஹாரிஸ், டோனல்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.
ஒருபுறம் டோனல்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடுகள், எலான் மஸ்க்கின் ஆதரவு என்று டோனல்ட் டிரம்ப் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மறுபுறம் துணை அதிபரான முதல் கருப்பின மற்றும் தெற்காசியப் பெண்ணான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ், இசைக்கலைஞர்களைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.
தனது இன்ஸ்டகிராமில் 283 மில்லியன் பின்தொடர்வோரைக் கொண்ட பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு கட்சிகளும் தங்களின் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களைப் பிரசாரங்களில் பயன்படுத்துகின்றன.
இந்த நிலையில் ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் (ஏஏபிஐ), கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஒரு யூடியூப் ஒளிவழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி கமலா ஹாரிஸுக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என்று ஜனநாயகக் கட்சி பெரிதும் நம்புகிறது.