போகிற போக்கைப் பார்த்தால் நடன இயக்குநர் என்பதற்குப் பதிலாக கதாநாயகன் சாண்டி என்று குறிப்பிட வேண்டும் போலிருக்கிறது.
சாண்டி நடித்த ‘லோகா’ திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வில்லன், நாயகன் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
இந்தத் திடீர் திருப்புமுனைக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் காரணம் என்கிறார் சாண்டி.
இனி தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்ட சுவாரசியமான தகவல்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
“என்னை ‘லியோ’ படத்தில் நடிக்க வைத்தது லோகேஷ்தான். ‘லியோ’ படத்தைப் பார்த்தபிறகுதான் ‘லோகா’ பட வாய்ப்பு தேடி வந்தது.
“இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு படத்துக்கு நடனம் அமைத்தேன். ‘கத்தனார்’ என்ற சரித்திரப் படத்தில் நடிக்கவும் செய்தேன். ஆனால், ‘லோகா’ படம் எனக்கு இந்திய அளவில் நடிகராகவும் பெயர் வாங்கித் தந்துள்ளது.
“நான் எந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தாலும், அது வெற்றி பெறுவதாகக் கூறுகிறார்கள். நான் அதை ஏற்க மாட்டேன். எல்லா பாடல்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பைத்தான் கொடுக்கிறேன். சின்ன நாயகன், பெரிய கதாநாயகன் என்றெல்லாம் பார்க்காமல், என்னுடைய முயற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
“ஒரு பாடல் வெற்றி பெறுவது ரசிகர்கள் கையில் உள்ளது. ஏனெனில், எந்தப் பாடல் வெற்றி பெறும் என்பது எங்களில் யாருக்கும் தெரியாது. நான் பணியாற்றிய அண்மைய பாடல்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பாக, ‘மோனிகா’, ‘சிக்கிட்டு சூடு’ பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன. அதேபோல் ‘மக்கா மிஷி’ (பிரதர்), ‘மினிக்கி மினிக்கி’ (தங்கலான்) பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘மோனிகா’ பாடலின் முழு காணொளியையும் ரஜினி படப்பிடிப்புத் தளத்திலேயே பார்த்துவிட்டார். உடனடியாக அவரது முகத்தில் பரவசம் தென்பட்டது.
“நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘சிக்கிட்டு சூடு’ பாடலுக்குச் சிறப்பாக நடனமாடியிருந்தார் ரஜினி. பாடல் காணொளியைப் பார்த்ததும், ‘ரஜினியை நன்றாக ஆடவிட்டீர்கள்’ என்று அனிருத், லோகேஷ் ஆகிய இருவரும் என்னைப் பாராட்டினார்கள். ரஜினியும்கூட ‘தூள் கிளப்பிவிட்டீர்கள். பெரிய ஆளாக வருவீர்கள்’ என வாழ்த்தினார்.
“முழு நேர நடிகராவது எனக்கு வரும் வாய்ப்புகளைப் பொறுத்து முடிவாகும். நிறைய நல்ல படங்கள் தேடி வருகின்றன. நாயகன், வில்லன் என்று எனக்கேற்ற, அதேசமயம் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வேன். தற்போது நடனம், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
“ஒரு பாடலுக்கு எந்த மாதிரியான நடன அசைவுகள் தேவை என்பதை இசைதான் தீர்மானிக்கும். அந்த இசை நம்மை அறியாமல் நம் மனத்துக்குள் இறங்கி, யோசனைகளை விதைக்கும். இசை எந்த அளவு வலுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்பத்தான் வேலை செய்ய முடியும். சுருக்கமாகச் சொன்னால், நடனத்திற்கு அடிப்படையே இசைதான்.
“இந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் நடன இயக்குநர், வில்லன் நடிகர் என்று என்னை சிலர் குறிப்பிடுகின்றனர். ஒரு வகையில் இது மகிழ்ச்சி அளித்தாலும், கிடைத்த மரியாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு அதிகரித்துள்ளதையும் உணர்கிறேன்,” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சாண்டி மாஸ்டர்.