‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளதாக வெளியான தகவல் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் கூடிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் ‘ஜனநாயகன்’ என்று கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் அரங்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து, இசை வெளியீட்டு விழாவை ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியான முறையில் நடத்த வேண்டும் எனத் தயாரிப்புத் தரப்புக்கு விஜய் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.
ஆனால், அவரது கடைசிப் படம் என்பதால் நிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதே தவெக நிர்வாகிகள், படக்குழுவினரின் விருப்பமாக இருந்தது. எனினும், சென்னையில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டால் பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என விஜய் தயங்கிய நிலையில், மலேசியாவில் இருந்து முக்கியப் பிரமுகர் ஒருவர், இசை வெளியீட்டைத் தாம் ஏற்று நடத்துவதாகக் கூறியதாகத் தகவல்.
மலேசியாவின் புத்ராஜெயா பகுதியில் இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்யத் தொடங்கிவிட்டதாகவும் டிசம்பர் 27ஆம் தேதி ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுவது தமிழக விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தாலும், சென்னையில் நடைபெறாததால் நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியாது என ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

