‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்’ எனும் பாடல் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த பாடகி சக்திஸ்ரீ கோபாலன் தம் ரசிகர்களைக் காண்பதற்காக அண்மையில் சிங்கப்பூருக்கு வருகையளித்திருந்தார்.
அவர் படித்தது கட்டடக்கலை; ஆனாலும், இன்று உலகளவில் புகழ்பெற்ற பாடகியாக உருவெடுத்து, கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் தமது இசையின்மூலம் இடம்பிடித்துள்ளார் சக்திஸ்ரீ, 37.
‘‘பல்கலைக்கழகத்தில் என் கண்கள் வரைபடங்களைத் தாண்டி, இசையின் நுட்பங்களையே எப்போதும் தேடி அலைந்தன. படித்தது கட்டடக்கலை என்றாலும், மனத்தில் இசையை முறையாகப் பயில வேண்டும் என்ற ஆசையே ஆழமாகப் பதிந்திருந்தது,’’ என்றார் அவர்.
அவரது அந்த நீண்டகால ஆசை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் ‘கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி’ இசைக் கூடத்தை வடிவமைக்கும் வாய்ப்பின்மூலம் பின்னர் நிறைவேறியது.
அது குறித்து விவரித்த சக்திஸ்ரீ, ‘‘ஏ.ஆர். ரகுமானின் இசையில் பாடுவதற்கு முன்னரே அவரை மனத்தளவில் குருவாக ஏற்றுக்கொண்டேன். இசைக்கூடம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற என் கனவுகளையெல்லாம் அந்தக் கட்டடத்தில் ஒரு சமர்ப்பணமாகச் செதுக்கினேன்,’’ என்று நினைவுகூர்ந்தார் அவர்.
அன்று இசையைக் கனவாக மட்டுமே சுமந்த அவர், இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பன்மொழி இசைத்துறைகளிலும் தடம் பதித்த, புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்கிறார்.
கனவுகளின் கதவைத் திறந்த பாடல்
2013ஆம் ஆண்டு ‘கடல்’ படத்தில் இவர் குரலில் ஒலித்த ‘நெஞ்சுக்குள்ள’ பாடல் ஊரறிந்த பாடகி சக்திஸ்ரீயை உலகறியச் செய்தது.
தமது குருவாகக் கொண்டாடிய ஏ.ஆர். ரகுமானின் இசையில் அமைந்த தமது முதல் பாடல் பற்றிப் புன்னகையுடன் விவரித்த அவர், அந்தப் பாடலை ஏதோ நேற்றுத்தான் பாடி முடித்ததுபோலத் தமக்குத் தோன்றுவதாகக் கூறினார்.
‘‘இந்தப் பாடலைக் குறித்து இசையமைப்பாளர் ரகுமான் என்னிடம் கூறிய ஒற்றை வரி, ‘இது கள்ளங்கபடமற்ற காதலைப் பற்றியது’ என்பதுதான். எனவே, அத்தூய்மையான காதல், பாடலின் மெட்டிலும் வரிகளிலும் உயிரோட்டமாக ஒலித்தது,” என்று சக்திஸ்ரீ கூறினார்.
அப்பாடலைச் சாதாரண வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை என்ற அவர், “நெஞ்சுக்குள்ள பாடல் ஓர் உணர்வு என்பதற்கும் அப்பால், என் கனவுகளை நனவாக்கும் சாத்தியங்களைத் திறந்துவிட்ட கதவு. என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை,’’ என்றார் அவர்.
நினைவலைகளாக மாறும் தனிப்பட்ட இசை
திரைப்படங்களில் பாடுவதற்கும் தனிப்பாடல் தொகுப்புகளை வெளியிடுவதற்குமான வேறுபாடு, அனுபவம் குறித்து கேட்டதற்கு, ‘‘படங்களில் பாடுவது என்பது, வெவ்வேறு கதாபாத்திரங்களாக உருவகப்படுத்திக் கொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பதாகும்.
‘‘ஆனால், தனிப்பட்ட இசை என்பது சொந்த உணர்வுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் ராகத்தின் வழியே உலகோடு பகிர்ந்துகொள்ளும் ஓர் அழகிய உரையாடல்,’’ என்று விளக்கமாகப் பதிலளித்தார் சக்திஸ்ரீ.
பாப், ஜாஸ் உள்ளிட்ட மேற்கத்திய இசைப் பரிமாணங்களில் தாம் வழங்கிவரும் ஒவ்வொரு தனிப்பட்ட பாடலும், வெளியிடப்படும் தருணத்தில் தம் வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் ஒரு ‘காலப் பெட்டகமாகவே’ மாறுவதாக அவர் குறிப்பிட்டார்.
“தனிப்பட்ட முறையில் இசையமைப்பது, என்னையே இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது,” என்றார் அவர்.
இசையமைப்பாளராகப் புதிய பயணம்
தம் இசைப் பயணத்தின் அடுத்தகட்டமாகத் திரைப்பட இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் சக்திஸ்ரீ.
கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளிவந்த ‘டெஸ்ட்’ மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதுவரை பாடகராக, பாடல் வரிகளுக்கான உணர்வுகளை மட்டுமே மனத்திற்குள் கற்பனை செய்து வந்த தமக்கு, திரையில் ஓடும் காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைத்து உயிரூட்டும் பணி முற்றிலும் புதியதாகவும் சிலிர்ப்பானதாகவும் அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“படத்தின் இறுதிக் காட்சியைப் பற்றி அறிந்தபோது, அதிலிருந்த மர்மமும் திகிலும் என்னை அறியாமலேயே இருக்கையைவிட்டு எழுந்து நிற்கச் செய்தன,” என்று நினைவுகூர்ந்தார் சக்திஸ்ரீ.
இயக்குநரின் கற்பனையை இசையாக மொழிபெயர்ப்பதும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான பின்னணி மெட்டை உருவாக்குவதும் தொடக்கத்தில் அவருக்குச் சவாலாகவே இருந்தது.
ஆயினும், புடாபெஸ்ட் இசைக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது போன்ற புதிய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இசையமைப்பாளராக தமது புதிய பயணத்தை இனிமையாகத் தொடங்கி வைத்ததாக அவர் கூறினார்.
சிங்கப்பூருடனான அழகிய பிணைப்பு
ஏ.ஆர்.ரகுமான், அனிருத் போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் சிங்கப்பூர் மேடைகளில் பாடி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அனுபவம் சக்திஸ்ரீக்கு உண்டு.
அண்மைய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது, முழுமையாகப் பெண்களால் நடத்தப்படும் ‘சுவாரே’ நிறுவனம் ஆகும்.
‘‘பாடகி சின்மயி போன்ற சிங்கப்பெண்களின் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திய இந்தக் குழுவோடு இணைந்து பணியாற்றுவது பெருமிதம் அளிக்கிறது.
“கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் துறையில் பெண்களின் பங்களிப்பு அரிதானது. அதிலும் ஒரே சிந்தனையுடைய பெண்களோடு இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வது மகிழ்ச்சி தருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“என் இசை நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்ளூர்க் கலைஞர்களுடன் இணைந்து பல புதிய முயற்சிகளை மேடையேற்ற ஆவலுடன் இருக்கிறேன்,” என்று நேர்காணலை நிறைவுசெய்தார் சக்திஸ்ரீ.
ஆகஸ்ட் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கேப்பிட்டல் தியேட்டரில் இவரது தனிப்பட்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


