‘ஜென் - சி’ இளையர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘கட்சி சேர’, ‘ஆசை கூட’ போன்ற பாடல்களைக் கொடுத்த இசைக்கலைஞரான சாய் அபயங்கருக்குத் தற்போது திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பாடகர் திப்புவின் மகனான சாய், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் ‘எல்.சி.யு’ யுனிவர்சிற்குள் வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
“இந்த வாய்ப்பு கிடைத்ததிற்கு முதலில் என்னுடைய வழிகாட்டிகளான சந்தோஷ் குமார், மகேஷ் ராஜேந்திரன், எனது தந்தை திப்புவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள்தான் என்னை வழிநடத்தி வருகிறார்கள். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கியக் காரணமும் இவர்கள்தான்,” என அண்மையில் விகடனுக்கு அளித்த நேர்காணலில் சாய் அபயங்கர் கூறினார்.
மேலும், “எனக்கு எப்பொழுதும் கதைகள் கேட்க பிடிக்கும். ஒரு நாள் சந்தோஷிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே, கதை கேட்பதற்காகச் சென்றேன். அங்கு இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இருந்தார். அவருடைய ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை,” என்றார் சாய்.
அவருடைய படத்திற்குத் தான் இசையமைக்கப் போகிறேன் எனத் தெரிந்திருந்தால் கதை கேட்காமலேயே ஒப்புக்கொண்டிருப்பேன் என அவர் சொன்னார்.
என்னை நம்பி இந்தப் பொறுப்பை என்னுடைய தயாரிப்பாளர்கள் சுதன், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை, பாடல்களுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது. இயக்குநரும் தயாரிப்பாளர்களும் எனக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகின்றனர். அது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கையோடு திறம்படச் செயல்பட்டு வருகிறேன்,” எனக் கூறியுள்ளார் சாய்.
‘பென்ஸ்’ படத்தின் பாடல் ஒன்றை கேட்டுவிட்டு தன்னை லோகேஷ் கனகராஜ் பாராட்டியதாகவும் இதுபோன்ற பெரிய படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சாய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் இவருக்குக் கைகொடுத்து ஊக்குவிக்கும் காணொளி அண்மையில் வலைத்தளங்களில் வெளியாகி பரவலானது. அது குறித்து கேட்கையில், “இயக்குநர் அட்லீ தான் விஜய்க்கு ‘ஆசை கூட’ பாடல் பிடித்திருப்பதாக என்னிடம் சொன்னார். இன்னும் உற்சாகமான சில தகவல்கள் வெளிவர இருக்கின்றன. அதுவும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்,” எனக் கூறி நேர்காணலை நிறைவுசெய்தார் சாய் அபயங்கர்.