தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவயதில் இட்லி சாப்பிட ஏங்கினேன்: தனு‌ஷ்

2 mins read
53ffbac8-a48b-43d8-b340-14c547e48f69
‘இட்லி கடை’ படத்தில் நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். - படம்: சமூக ஊடகம்
multi-img1 of 2

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள தனு‌ஷ் தற்போது இயக்குநராகவும் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளார்.

தற்போது தனு‌ஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது படம் உருவான கதைகுறித்து நடிகர் தனுஷ் உருக்கமாகப் பேசியுள்ளார்.

“நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஓர் இட்லிக் கடை இருக்கும். தினமும் அந்தக் கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் என்று எனக்கு ஏக்கம் இருக்கும். ஆனால், என் கையில் காசு இருக்காது. அதனால் காசுக்காகக் காலையில் வயலில் இறங்கி பூப்பறிக்கச் சொல்வேன். எவ்வளவு பூக்கள் பறித்துக் கொடுக்கிறமோ அதற்கு ஏற்ப காசு கொடுப்பார்கள்.

“எனவே நான், என் அக்கா இருவரும் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அந்த வயலுக்குச் சென்று பூப்பறிப்போம். தொடர்ந்து இரண்டரை மணி நேரம் விடாமல் பறிக்கவேண்டும். அப்படிச் செய்தால் ஆளுக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும். அதை எடுத்துக் கொண்டு நேராக ஒரு தோட்டத்துக்குச் செல்வோம். அங்கே இருக்கும் ஒரு குட்டையில் ஆசை தீர குளிப்போம். பின்னர் அந்தக் கடைக்குள் சென்று இரண்டு ரூபாய் கொடுத்து நான்கு இட்லி வாங்கிச் சாப்பிடுவோம்.

“அப்படி உழைத்துச் சாப்பிடும்போது வரும் சுவையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெரிய உணவகங்களில் சாப்பிடும்போதுகூட எனக்குக் கிடைக்காது. இந்த இட்லிக் கடையை வைத்து நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது என்று தோன்றியது. வெறும் இட்லிக் கடை மட்டுமின்றி அந்தக் கிராமத்தில் என் மனதைப் பாதித்த ஒரு சில உண்மை கதாபாத்திரங்களையும் அதன் பிறகு நாங்கள் சென்னை வந்தபிறகு என் மனத்தைப் பாதித்த சில உண்மை கதாபாத்திரங்களையும் வைத்து எழுதப்பட்ட கற்பனையான கதைதான் இந்தப் படம்,” என்று தனுஷ் பேசினார்.

அருண் விஜய் புகழாரம்

இந்நிலையில், ‘இட்லி கடை’ படத்தில் நடித்த அருண் விஜய் தனு‌‌ஷைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

“நான் ‘ராயன்’ படம் பார்த்தபிறகு தனுஷின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தனுஷைப் பார்த்து நிறைய இடங்களில் வியந்திருக்கிறேன். நான் நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், தனுஷின் பாணி எனக்கு வியப்பாக இருந்தது. ‘இட்லி கடை’ படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்த படமாக இருக்கும்,’’ என்றார் அருண் விஜய்.

தொடர்புடைய செய்திகள்

தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், பார்த்திபன், பிரிகிடா சாகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘இட்லி கடை’ அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்