இந்தியத் திரையுலகில் எனக்குப் போட்டியாக நான் யாரையும் கருதவில்லை. எனக்கு நான்தான் போட்டி என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
எனது முந்தைய படங்களைக் காட்டிலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களில் எந்த அளவுக்கு என்னை மெருகேற்றிக்கொண்டு நடிக்கவேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொருவரும் அவரவருக்கேற்ற நடை உடை பாணியுடன் முன்னேறிச் செல்வதால், யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கமுடியாது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளேன் என்றும் அவர் சொல்கிறார்.
ஒருவரது வெற்றியும் தோல்வியும் அவரவர் கைகளில்தான் உள்ளது. மற்றவர்களால் எனது வாய்ப்பு பறிபோனது, நான் தோல்வியைச் சந்தித்தேன் என்று கூறுவது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்காகக் கூறும் பொய்க் காரணங்கள்தான்.
எனவே, யாரையும் போட்டியாகக் கருதாமல் எனது தனித்துவமான நடிப்பின்மூலம் என்னுடன் நானே போட்டிபோட்டு வெற்றியடைய விரும்புகிறேன் என்று தன்னிலை விளக்கம் அளிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தனது வித்தியாசமான நடிப்பின்மூலம் தேசிய விருதுக்கு சொந்தக்காரராக விளங்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது ‘ரகு தாத்தா’ வெளியீடு, இந்தியில் அறிமுகம் என இரட்டைக் கொண்டாட்ட மனநிலையில் இருந்து வருகிறார்.
தொடர்ந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் இவர் தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், “ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நாயகன்களுக்கான படங்களாக மட்டும் இல்லாமல் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களும் அதிகம் வர ஆரம்பித்துள்ளன.
நாயகிகளைச் சார்ந்திருக்கும் கதைகளாக என்னிடம் நிறைய வருவதால், இயக்குநர்களுக்கு என்மீதான நம்பிக்கை அதிகமாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. அந்த நம்பிக்கைக்கு உத்தரவாதம் தரும் வகையில் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறேன்,” என்கிறார் கீர்த்தி.
நான் திரையுலகில் அடியெடுத்து வைத்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது முன்பைக் காட்டிலும் பொறுப்புகள் அதிகம் கூடியுள்ளதாக உணர்கிறேன் என்று கூறும் அவர், தெலுங்குப் படமான ‘மகாநடி’, தமிழ் மறுபதிப்பான ‘நடிகையர் திலகம்’ தேசிய விருது வரைக்கும் என்னை அழைத்துச் சென்றது.
தொடர்புடைய செய்திகள்
இன்னும் நிறைய இயக்குநர்களுடன் வேலை செய்யவேண்டும். நிறைய வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது.
இதுவரை வந்த கதைகள், வேடங்கள் எல்லாம் தானாகவே அமைந்தன. இனியும் அப்படி இல்லாமல் மிகவும் பக்குவமாக கதைகளையும் பாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கவேண்டும் என விரும்புகிறேன் என்கிறார்.
இப்போது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கீர்த்தி சுரேஷ், நடிக்க வந்த புதிதில் அவ்வளவாக உடற்கட்டு, தோற்றத்தில் எல்லாம் ஆர்வம் காட்டியது கிடையாது. பார்க்க அழகாகத் தோன்றவேண்டும் என்பதையும் தாண்டி உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன்.
திரையுலகில் மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று சொல்கிறார் கீர்த்தி.
இப்போது எடை தூக்குவது, யோகா, ‘அனிமல் ஃபார்ம்’ என்கிற உடற்பயிற்சியையும் செய்து எனது உடற்கட்டை பொறுப்போடு பேணி வருகிறேன் என்கிறார்.
விஜய்யின் கட்சியில் சேரப்போவதாகவும் அவரது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நீங்கள்தான் என்னும் செய்தி அடிபடுகிறதே என்ற கேள்விக்கு, முதலில் கொள்கை பரப்புச் செயலாளராக எனக்கு நடிகர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வரவேண்டும்? கூப்பிடும்போது பார்க்கலாம் என்று புன்முறுவலுடன் கூறிய கீர்த்தி, கல்யாணம் இப்போதைக்கு இல்லை என உறுதியாகச் சொல்கிறார்.
ஆனால், எனக்கும் ஒருநாள் நிச்சயம் நடக்கும். என்மீது அன்புகாட்டும் ஒருவர் உள்ளார். இப்போதைக்கு அவர் யார் என வெளிப்படையாகச் சொல்லமுடியாது. நேரம் வரும்பொழுது நிச்சயமாகச் சொல்வேன் என்று மலுப்பலாகப் பேசிய கீர்த்தி, தான் நடித்து வரும் படங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
‘ரகு தாத்தா’ படத்துக்குப் பிறகு ‘ரிவால்வர் ரீட்டா’ வெளிவர உள்ளது. தொடர்ந்து ‘கண்ணிவெடி’ படம், ஒரு இணையத் தொடரில் நடித்துக்கொண்டு உள்ளேன். தெலுங்கிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘பேபி ஜான்’ இதுவரையிலும் நான் நடித்த படங்களைக் காட்டிலும் வித்தியாசமான, அதிரடி திருப்பங்கள் கொண்ட படமாக இருக்கும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.