ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்படத்தின் வெற்றி விழா நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
‘அமரன்’ படம் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படம் பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர். சிவகார்த்திகேயனின் நடிப்பைப் பார்த்து பலரும் வியந்துபோயுள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை பலம் சேர்த்திருப்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், அப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தனது தந்தையைப் பற்றி பேசியபோது மேடையில் கண் கலங்கியது ரசிகர்களை நெகிழ வைத்தது.
“இந்தப் படத்தைச் சரியாகப் படமாக்க வேண்டும் என்று நான் நினைத்ததற்குக் காரணம் என் தந்தைதான். தமிழ்நாட்டுச் சிறைத் துறையில் பணியாற்றியவர்களிடம் என் தந்தையைப் பற்றி கேட்டால் தெரியும். என் தந்தை ஒருநாள்கூட பணியில் இருந்து விடுப்பு எடுத்து நான் பார்த்தது இல்லை,” என்றார் சிவா.
மேலும், “மேஜர் முகுந்திற்கும் என் அப்பாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. மேஜர் முகுந்த் போலவே என் தந்தையும் விடுமுறைக்கு வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்றபோது கூட்டமாக இருந்தது. என் தந்தை இறந்துவிட்டது தெரிந்தது,” என சிவா மிக வருத்தத்துடன் கூறினார்.
“மத ரீதியான சடங்குகள் அனைத்தும் முடிந்தபிறகு என் தந்தையின் நொறுங்கிய எலும்புகளைப் பார்த்தேன். அன்று நொறுங்கியது அவருடைய எலும்புகள் மட்டுமல்ல், 17 வயது இளையரான என் இதயமும்தான்,” என உருக்கமாகப் பேசினார் சிவா.
“இன்று ‘அமரன்’ படத்தைப் பார்த்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் என்னைப் பாராட்டுகின்றனர். நீங்கள் அனைவரும் அன்று நொறுங்கிப்போன என்னை ஒட்டவைத்து இந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள். இன்று நான் இங்கே சிவகார்த்திகேயனாக நிற்கவில்லை, தாஸ் என்கிற நேர்மை தவறாத காவல்துறை அதிகாரியின் மகனாக நிற்கிறேன்,” எனத் தன் தந்தையை நினைவுகூர்ந்தார் சிவா.
“என் தந்தைக்கு இந்திய அரசாங்கம் விருது அறிவித்தது. அதை என் தாயார்தான் பெற்றுக்கொண்டார். நான் அதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். இந்தப் படமும் என் வாழ்க்கையும் ஒன்றுதான்.
தொடர்புடைய செய்திகள்
“என் தந்தையின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், என் தந்தையைப் பற்றி பேச நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அதுவே எனக்குப் போதும். என் தந்தை நீங்கள் எனக்குக்கொடுக்கும் கைத்தட்டலுக்கு மத்தியில்தான் இருக்கிறார் என்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்,” எனக் கூறி சிவகார்த்திகேயன் கண் கலங்கியதால் அங்கு கூடியிருந்த பலரும் அழுதனர்.