‘கோவா’ படத்துக்குப் பிறகு ‘வித் லவ்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா.
பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அண்மைய ஊடகப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
“‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அதன் இயக்குநர் அபிஷன் சிறிய கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருந்தார். அது பிடித்துப்போனதால் அவரை வைத்து ‘வித் லவ்’ படத்தைத் தயாரிக்கிறேன். அபிஷனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன்தான் ‘வித் லவ்’ படத்தின் இயக்குநர்.
“மதனும் இப்படத்தின் தயாரிப்பாளர்தான். அபிஷன் இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் தன்னை நிரூபிக்கக் காத்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் அவர் பெரிதாக ஒரு வெற்றிவலம் வருவார் என நம்புகிறேன்,” என்று சவுந்தர்யா கூறியுள்ளார்.
தனது தந்தை ரஜினி குறித்துப் பேசினால் மகள் சவுந்தர்யாவின் முகத்தில் ஒரு வெளிச்சம் படர்கிறது.
ஒரே சந்திரன், ஒரே சூரியன் என்பதுபோல் ஒரே ஒரு ‘சூப்பர் ஸ்டார்’தான் என்று ரசிகர்களைப் போலவே இவரும் தனது தந்தையைக் கொண்டாடுகிறார்.
தன் தந்தையின் இடத்தை வேறு யாராலும் அடைய முடியாது என்றும் இதுதான் நூறு விழுக்காடு உண்மை என்றும் திட்டவட்டமாகச் சொல்கிறார். 50 ஆண்டுகாலம் திரையுலகில் நீடிப்பது சாதாரண சாதனை அல்ல என்றும் நெகிழ்கிறார்.
திரையுலகில் தனது பொன் விழா ஆண்டில் ‘படையப்பா’ படத்தை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று ரஜினி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாராம்.
பொன் விழாக் கொண்டாட்டத்துக்காக மறுவெளியீடு செய்யப்பட்ட ‘படையப்பா’வுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு ரஜினி குடும்பத்தாரை பரவசப்படுத்தியுள்ளது.
“ஏன் பெரிய விழா எடுக்கவில்லை என்று எல்லாரும் கேட்கிறார்கள். உண்மையில் இந்தக் கொண்டாட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. அப்பாவுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள அன்புக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.
“அப்பா இப்போது தனது சுயசரிதை நூல் எழுதும் வேலையைத் தொடங்கிவிட்டார். அதற்காகவும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு நிச்சயமாக உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று சவுந்தர்யா கூறியுள்ளார்.
ஓர் இயக்குநராக நம் மனத்தில் நினைக்கும் அனைத்தும் திரையில் வரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல என்றும் அது சாத்தியமல்ல என்றும் ரஜினி அடிக்கடி கூறுவாராம். ஒரு கட்டத்துக்கு மேல் மெருகேற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் சொல்வாராம்.
“ஒரு நல்ல திரைப்படம் ரசிகர்களுடன் எளிதில் பொருந்த வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி என்பார் அப்பா. அவரிடம் பிடித்த அம்சங்கள் நிறைய உள்ளன. அவர் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் பிரமிக்க வைக்கும். அவையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. ஒரு படத்துக்காக உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், அதை மீறி படம் முடியும் வரை வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
“காலை, மாலை என இரு வேளையும் உடற்பயிற்சி செய்கிறார். சில சமயங்களில் நாம்கூட ‘நாளை பார்த்துக்கொள்வோம்’ என்று முடிவெடுப்போம். ஆனால் படப்பிடிப்பில் இருந்து வந்தால்கூட உடற்பயிற்சி செய்ய அவர் மறக்க மாட்டார்,” என்று குறிப்பிடும் சவுந்தர்யாவுக்கு, தன் தந்தை நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’தான் மிகவும் பிடித்த படமாம். இரண்டாம் இடத்தில் இருப்பது ‘படையப்பா’, கணக்கில்லாமல் பார்த்த படம் ‘தில்லுமுல்லு’ என்கிறார்.

