எங்களது நடிப்பில் வெளியான படத்துடன் இணைந்து வெளியான அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில், இது எங்களது துறை. அனைவரும் சேர்ந்து ஓடினால், சேர்ந்து வெற்றிபெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.
இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் நகைச்சுவை படமாக உருவாகியிருந்தது.
30 வயதிற்கு மேற்பட்ட ஆண் மகனுக்கு இன்றைய சூழலில் திருமணம் என்பது எந்த அளவுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அதை ஒரு குடும்பம் எவ்விதத்தில் சமாளித்து அதில் இருந்து மீண்டு திருமணம் நடத்தி வைக்கின்றனர் என்ற இன்றைய சூழலை இப்படம் பேசியிருந்தது.
கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இதையொட்டி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் விக்ரம் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தின் மூலம் ஏராளமானோரின் அன்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால், இந்தப் படம் வெளியான பிறகு சென்னை, மதுரையில் உள்ள திரையரங்கத்திற்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. இந்தப் படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து ரசித்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“நான் ஷான் ரோல்டனின் ரசிகன். இந்தப் படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது. நாயகிகள் இருவரும் இரண்டு தூண்களாக அற்புதமாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.
“இந்தப் படத்தை பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறாய் என பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம்தான். இந்தப் படத்தின் மூலம் ஏராளமானோரின் அன்பை சம்பாதித்து இருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் எனது திறமையை நிரூபித்த பிறகுதான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது,” என்று கூறியுள்ளார் விக்ரம் பிரபு.

