எனது படங்களில் பறந்து பறந்து சண்டை போடும் நாயகன்கள் இல்லை: இயக்குநர் சசி

எனது படங்களில் பறந்து பறந்து சண்டை போடும் நாயகன்கள் இல்லை: இயக்குநர் சசி

1 mins read
6e0ac1dd-2947-4f10-8631-80e9b4d631d8
விஜய் ஆண்டனி - சுவாசிகா நடிப்பில் ‘நூறு சாமி’ என்ற படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.  - படம்: தினத் தந்தி

‘சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ போன்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய சசி, அடுத்ததாக விஜய் ஆண்டனி - சுவாசிகா நடிப்பில் ‘நூறு சாமி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

“அன்பாக இருப்பவர்களை மிதிக்கும் உலகம் இது. இம்முறை ஒற்றைப் பெற்றோரின் வலிநிறைந்த வாழ்க்கையையும் தாய்மையின் மகத்துவத்தையும் கதையாகச் சொல்லியிருக்கிறேன்.

“நமக்காக அழும் தாயைப் பார்த்து, ‘ஏன் நடிக்கிறாய்?’ எனக் கேட்கும் மகன்கள் இங்கு உண்டு. அவர்களை யோசிக்க வைக்கும் படமாக இது இருக்கும்,” என்கிறார் இயக்குநர் சசி.

எதார்த்தத்தைத் தாண்டி வணிக ரீதியாக நல்ல லாபம் ஈட்டும் படங்களை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கும் அவர் பதில்தந்தார்.

புதுமையான கதையை விறுவிறுப்பாகச் சொன்னாலே அது வணிக ரீதியான படம்தான் என்றார் அவர். மனித உணர்வுகளின் நெகிழ்ச்சி தமக்குப் பிடிக்கும் என்பதால், தமது படங்களில் அது நிறைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“திரைப்படத்தில் ‘ஹீரோயிசம்’ என்பது கதையின் நாயகனை ஒரு சாதாரண மனிதனாகக் காட்டாமல், அதீத சக்தியும் திறமையும் கொண்ட ‘சூப்பர்மேன்’ போலக் காட்டுவதாகும்,” என்றார் சசி.

ஆனால் தமது படங்களில் அசாத்திய சண்டைகளும் ‘பஞ்ச்’ வசனங்களும் நிறைந்த ‘ஹீரோயிசம்’ இருப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், தமது பாணி தனித்துவமானது எனச் சொன்னார்.

“இப்படம் வெளியான பிறகு, சமூகத்தில் உள்ள ஒற்றைப் பெற்றோர் தங்களைப் பெருமையுடன் ஒரு முன்மாதிரியாக நினைத்துக்கொள்வார்கள் என்பது உறுதி,” என்று நம்பிக்கையோடு கூறினார் இயக்குநர் சசி.

குறிப்புச் சொற்கள்