தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நான் பெற்ற முதல் விருது’: தாம் படித்த பள்ளிக்கு காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த ரஜினி

2 mins read
40165658-5e49-4d8f-8c40-188607ea917f
ரஜினி படித்த பள்ளி. - படங்கள்: ஊடகம்
multi-img1 of 2

தாம் படித்த பள்ளியில் பழைய மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் காணொளி மூலம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரஜினி.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா பாடசாலா குழுமத்தின் நடுநிலைப் பள்ளியிலும் அக்குழுமத்தின் கல்லூரியிலும் படித்தவர் ரஜினி.

எனவே, நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கல்வி நிர்வாகம் கடிதம் எழுத, வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பு காரணமாக நிகழ்ச்சி நடக்கும் தேதியில் தம்மால் அங்கு வர இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார் ரஜினி.

இந்நிலையில், தனது பள்ளி நாள்களை நினைவுகூர்ந்து ஒரு காணொளியை விழாக்குழுவுக்கு அனுப்பியுள்ளார் ரஜினி.

“அரசு தொடக்கப் பள்ளியில் கன்னட மொழியில் படித்தபோது 90%க்கு மேல் மதிப்பெண் எடுத்தேன். ஆனால், ஆச்சார்யா நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தபோது மதிப்பெண் வாங்க முடியவில்லை. அதனால் முன்வரிசை மாணவனாக இருந்த நான் கடைசி வரிசைக்குப் போய்விட்டேன்.

“எனினும் இந்தப் பள்ளிக்கூடம்தான் என் திரைத்துறை வாழ்க்கைக்குப் பாதை அமைத்துக்கொடுத்தது எனலாம். இங்கு படித்தபோது ஒரு நாடகத்தில் நடித்தேன். சிறந்த நடிகர் விருது கிடைத்தது.

“நடிப்புக்கு என நான் வாங்கிய முதல் விருது என்றால், 1960களில் நான் வாங்கிய இந்த விருதுதான். அங்கு தொடங்கிய நடிப்புப்பயணம் இப்போது வரை மக்களை மகிழ்விக்கும் பயணமாக நீடித்து வருகிறது.

“ஆச்சார்யா பள்ளியில் படிப்புக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அங்குள்ள திடலில் நாள்தோறும் விளையாடிய நாள்கள் எல்லாம் இப்போதும் நினைவில் உள்ளன.

“நான் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதபோது எனக்கு மட்டும் தனியாக சிறப்பு வகுப்புகள் எடுத்து ஆசிரியர்கள் என்னைத் தேர்ச்சி பெற வைத்தனர். அதே நிர்வாகத்தின் கீழ் ஏபிஎஸ் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், சில காரணங்களால் கல்லூரிப் படிப்பை முடிக்க இயலவில்லை,” என்று அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

பழைய மாணவர்கள் சந்திப்பு குறித்து ரஜினியின் கவனத்துக்குக் கொண்டுசென்று, அவரது வாழ்த்துச் செய்தியையும் பெற்றுத் தந்தவர் நெல்லையைச் சேர்ந்த திருமாறன்.

இவர் வெங்கடாம்பட்டி என்கிற கிராமத்தில் இருந்தபடி, சுமார் 40 ஆண்டுகளாக ரஜினி பெயரில் ரத்த தான கழகம் நடத்தி வருகிறார்.

ரஜினியுடன் தொடர்புள்ள அனைத்து இடங்களுக்கும் புண்ணியத் தலங்களுக்குச் செல்வதுபோல் பயணம் மேற்கொண்டுள்ளாராம்.

“அந்த வகையில் ஆச்சார்யா பள்ளிக்கும் சென்றுள்ளேன். அதனால் பள்ளி முதல்வர் விஷ்ணு பாரத்துடன் நல்ல அறிமுகம் உள்ளது. அவர்தான் ரஜினியை நிகழ்ச்சிக்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“இப்போது வரமுடியாவிட்டாலும் இன்னொரு முறை பள்ளிக்கு வருவதாக ரஜினி கூறியுள்ளார்,” என்கிறார் திருமாறன்.

குறிப்புச் சொற்கள்