இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், மாறுபட்ட கதைகளைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார். அவற்றில் குறிப்பிடத்தக்க இரண்டு படங்கள் ‘இளையராஜா’, ‘கலாம்’.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறுதான் ‘இளையராஜா’ படக்கதை.
இதேபோல் இந்தியாவின் ஏவுகணை நாயகனான முன்னாள் அதிபர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறுதான் ‘கலாம்’ படக்கதை.
“ஊக்கம் நிறைந்த தேசத் தலைவராகத் திகழ்ந்த திரு அப்துல் கலாமின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது எனது கொடுப்பினை,” என மகிழ்ச்சி தெரிவித்தார் தனுஷ்.
முதலில் அறிவிக்கப்பட்ட ‘இளையராஜா’ படத்தைவிட, அடுத்து அறிவிக்கப்பட்ட ‘கலாம்’ பட வேலைகள் சூடுபிடித்துள்ளன.
‘இளையராஜா’ படம் வைவிடப்பட்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. அண்மையில் டெல்லி விமான நிலையத்தில் தனுஷைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ‘இளையராஜா’ படம் குறித்துக் கேட்க, “அந்தப் படம் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை,” என தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது.