உதயநிதி: இதுவே கடைசிப் படம்

உதயநிதி: இதுவே கடைசிப் படம்

2 mins read
197645cd-3d3d-422b-988e-727253a516d7
'மாமன்னன்' படத்தில் வடிவேலு, உதயநிதி. படம்: இணையம் -

வடிவேலு நடிக்கவில்லை என்றால் 'மாமன்னன்' என்ற படம் உருவாகி இருக்காது என்கிறார் நாயகன் உதயநிதி.

சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, தற்போதைக்கு 'மாமன்னன்' தனது கடைசிப் படம் என்று குறிப்பிட்டார். ஒருவேளை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அது இயக்குநர் மாரி செல்வராஜின் படைப்பாகத்தான் இருக்கும் என்றார் அவர்.

"மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன்.

"வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பாக இந்தப்படம் அமைந்ததில் மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது.

"இந்தப் படத்தை ஜூன் 29ஆம் தேதி வெளியிட முடிவுசெய்துள்ளோம். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் நான் திரைப்படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது.

"நிறைய வேலைகள் உள்ளன. அதனால் என்மீதான எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையேதான் படத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்கும் இசை வெளியீட்டு விழாவுக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.

"எனக்குத் தெரிந்து இதுதான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கும். எனினும், நல்ல படமாக அமைந்த மனநிறைவு உள்ளது. நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். அவரது பாணியிலான அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது," என்றார் உதயநிதி.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பா.ரஞ்சித் ஆகியோருடன், ஏ.ஆர்.ரகுமான், வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு, இதுவரை திரையில் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த உதயநிதி, இனி அரசியல் களத்தில் நாயகனாகப் போகிறார் என்று குறிப்பிட்டார்.

எனவே, 'மாமன்னன்'தான் உதயநிதியின் கடைசிப் படம் என சொல்லத் தேவையில்லை என்றார் அவர்.

"வித்தியாசமான கதைக்களத்தில் நடித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது," என்றார் வடிவேலு.