நடிகை பார்வதி நாயர் தனது உதவியாளர் குறித்து தற்போது தெரிவித்துள்ள தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
இது தொடர்பாக தனது வழக்கறிஞரின் உதவியோடு இரு பக்கங்கள் கொண்ட ஒரு விளக்கத்தை அவர் அளித்துள்ளார். இதன்மூலம் தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் என்று பார்வதி கூறியுள்ளார்.
தனது வீட்டில் இருந்து லட்சக்கணக்கான பணம் திருடப்பட்டது என்றும் இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்த நான்கு பேரில் சுபாஷ் என்பவர் தனது உதவியாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சுபாஷும் ஒரு குற்றவாளி என்பதை அறிந்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தேன். அவரே விருப்பத்துடன் வந்து எனது உதவியாளர்போல் செயல்பட்டார்.
“காவல்துறையிடம் சிக்கிய பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டோரின் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு தொடர்ந்து மிரட்டி வருகிறார். மேலும், இரண்டு கோடி ரூபாய் பணமும் தரும்படி கோருகிறார்.
“அவரது மிரட்டலுக்குப் பணியாததால் என்னைப் பற்றி தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புகிறார்,” என்று பார்வதி நாயர் குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பத்தாரை விட்டுவிட்டு, திரைப்படத் துறையில் பணியாற்ற வந்திருக்கும் தம்மை அனைத்து விதமாகவும் துன்புறுத்த சுபாஷ் வியூகம் வகுத்துள்ளார் என்றும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
தாம் அனுபவித்த துன்பம் குறித்து மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நீண்ட விளக்கத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தாம் வெளிப்படையாக அனைத்தையும் தெரிவிக்க வேண்டியுள்ளது என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் சரியான நேரத்தில் உண்மை வெளிவரும் என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இவர், சென்னையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
‘உத்தம வில்லன்’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, அண்மையில் வெளியான ‘கோட்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் பார்வதி.
இவரது கண்ணீர் அறிக்கையைப் படித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், பார்வதிக்கு இயன்ற உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளனராம்.
மேலும், சில திரையுலகம் சார்ந்த சங்கங்களும் பார்வதிக்கு உதவிக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.