நடிகர் சத்யராஜ் வீட்டில் உள்ள ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருவதாக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இப்பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
“என் தாயார் கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு ‘ட்யூப்’ மூலமாகத்தான் உணவு கொடுத்து வருகிறோம்,” என திவ்யா சத்யராஜ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் சிபி, திவ்யா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சிபி தமிழ்ச் சினிமாவில் நடிகராக உள்ள நிலையில், மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திவ்யா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “கடந்த நான்கு ஆண்டுகளாக என் அம்மா கோமாவில் இருக்கிறார். எங்கள் வீட்டில் வைத்துதான் அவரை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துபோய் இருந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் என் அம்மா கண்டிப்பாகக் குணமடைந்துவிடுவார் என்ற நேர்மறையான எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம்.
“எங்கள் அம்மா எங்களுக்குத் திரும்பவும் கிடைப்பார் என்று எங்களுக்குத் தெரியும்.
“கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பாதான் தாய்க்குத் தாயாக இருந்து எங்களைக் கவனித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் அப்பாவின் அம்மா, எனது பாட்டி இறந்துவிட்டார். அந்த வகையில் என் அப்பாவுக்கு நானும் ஒரு தாய்போல மாறிவிட்டேன். நானும், அப்பாவும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பு செலுத்தி வருகிறோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு, “உங்கள் அம்மா கண்டிப்பாக உடல் நலம் தேறி மீண்டு வருவார்கள்,” என்று ஆறுதலாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

