தன்னுடைய இயக்கத்தில் வெளியாக இருக்கும் அடுத்த படம் நாட்டிற்குப் பெருமை தேடித் தரும் என்று கூறியுள்ளார் இயக்குநர் அட்லி.
‘ராஜா ராணி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அட்லி, ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தை இயக்கி பாலிவுட்டிலும் அறிமுகமானார். இப்படம் ரூ.1,200 கோடி வசூல் செய்தது.
இதனையடுத்து, அட்லியின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏ6’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பேபிஜான்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அட்லி பேசும்போது, “எனது அடுத்த படத்திற்கான கதையை நாங்கள் எழுதி முடித்துவிட்டோம். மிக விரைவில், கடவுளின் ஆசீர்வாதத்துடன் ஒரு பெரிய அறிவிப்பு வரும். இப்படம் நாட்டை பெருமைப்படுத்தும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை,” என்று கூறினார்.