தன் மனைவி ஆர்த்தி முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் பொது வெளியில் தாம் அவதூறு செய்யப்படுவதாகவும் தம் மீதான கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும் கூறியுள்ளார் நடிகர் ரவி மோகன்.
இவர் தன் மனைவி ஆர்த்தியைப் பிரிந்துவிட்டது தெரிந்த தகவல்தான். இவர் வேறொரு பெண்ணை விரும்புவதாக ஆர்த்தி சாடியிருந்தார்.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் பங்கேற்றார் ரவி மோகன்.
இந்நிலையில், அறிக்கை ஒன்றில், ஜெயம் ரவியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆர்த்தி. அதில், ‘அப்பா என்பது வெறும் வார்த்தையல்ல, பெரும் பொறுப்பு’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது நடிகர் ரவி மோகனும் தன் பங்குக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நான் எனது குடும்பத்தினரிடம், நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் ரசிகர்களிடம், விவாகரத்து கோருவதற்கு முடிவு செய்ததை ஏற்கெனவே பகிர்ந்திருந்தேன். ஆனால், எனது மௌனம் குற்றமாக புரிந்து கொள்ளப்படுகிறது.
“அண்மைய பொது தோற்றங்களின் அடிப்படையில், எனது குணத்தை மட்டுமல்ல, கேள்விக்குள்ளாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் பொது வெளியில் அவதூறு செய்யப்படுகிறேன். இந்தக் கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்,” என்று ரவிமோகன் கூறியுள்ளார்.
தமது சூழ்நிலைகளை முழுமையாக அறிந்து, புரிந்துகொண்ட பிறகே தமது முன்னாள் மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விட்டுவிலக முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமது குழந்தைகள்தான் தமது நிரந்தர பெருமையும் மகிழ்ச்சியும் என்பதால் அவர்களை விட்டு விலகப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“பிரிவுக்குப் பிறகு நான் வேண்டுமென்றே அவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன். இப்போது, எனது குழந்தைகளை நான் பார்க்கவோ அணுகவோ முடியவில்லை.
“கெனிஷா எனது தோழியாக இருந்தவர். நீரில் மூழ்கிய என்னைக் காப்பாற்ற முயற்சி செய்தவர். அடிப்படை கண்ணியம்கூட என்னிடம் இருந்து பறிக்கப்பட்டபோது எனக்காக நின்றவர் கெனிஷா. அவர் என் அழகான வாழ்க்கைத் துணை.
“என்னைப் பொன்முட்டையிடும் வாத்தாக மட்டுமே கருதினர். என் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்.
“எனது முன்னாள் மனைவியையும் குடும்பத்தையும் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து நேசித்து ஆதரித்தேன். விரைவில் அவர்களின் உண்மை அறிந்து ஒரு ஆணாகவும் தந்தையாகவும் விலகுவதற்கு எனக்கு எவ்வளவு வலிமை தேவைப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்,” என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

