‘புளூ ஸ்டார்’ படத்தையடுத்து, நடிகர் பாண்டியராஜின் மகன் பிரித்வி ராஜனுக்கு நல்லகாலம் தொடங்கிவிட்டது எனலாம்.
தற்போது ‘பராசக்தி’ படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரித்வி ராஜன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடியதை மறக்கமுடியாத அனுபவம் என்கிறார் பிரித்வி.
’பராசக்தி’ படத்தின் முன்னோட்டக் காட்சியில் இவர் நடித்த சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதைப் பார்த்த உடனேயே எராளமானோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனராம். இந்தப் படத்தில் மதுரை வட்டார மொழியில் பேசியுள்ள பிரித்வி முழுப்படத்திலும் ஒப்பனையின்றி நடித்துள்ளார்.
“கடந்த 1960களில் நடக்கும் கதை இது. அச்சமயம் ‘பெல்பாட்டம் பேண்ட்’கூட கிடையாது. ஆனால் இயக்குநர் சுதா கொங்கரா ஒப்பனையில் கவனமாக இருப்பவர். என்னுடைய தோற்றம் அவருக்குப் பிடித்துவிட்டது. மெல்லிய மீசையுடன் ஒப்பனை இல்லாமல் இருப்பதுதான் என் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருக்கும் என்று முடிவு செய்துவிட்டார்.
“நான் ‘பராசக்தி’யில் நடித்தபோதுதான் தனுஷ், விக்னேஷ் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். இரண்டு படங்களிலும் எனது தோற்றத்தைக் கவனித்துக்கொண்டது சவாலாக இருந்தது.
“வழக்கமான மதுரை தமிழ் என்றதும் ’வந்தாய்ங்க’, ’போனாய்ங்க’ போன்ற உச்சரிப்புத்தான் இருக்கும். ஆனால் இயக்குநரோ என்னுடைய வசன உச்சரிப்பில் வட்டார வழக்கின் கச்சிதம் இருக்க வேண்டுமென கண்டிப்புடன் சொல்லி விட்டார்.
“நடிகை ஸ்ரீலீலாவின் நடனத்துக்கு நானும் என் தம்பியும் தீவிர ரசிகர்கள். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். இந்தப் படத்தில் நானும் அவரும் இடம்பெறும் காட்சிகள் பல உள்ளன.
“இயக்குநர் சுதா கொங்கரா மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விப்பட்டிருந்ததால் தொடக்கத்தில் பயந்தேன். வேலை என்று வந்துவிட்டால் எந்தவிதச் சமரசத்துக்கும் உடன்பட மாட்டார். நடிப்பு, தொழில்நுட்பம் என்று அனைத்திலுமே நூறு விழுக்காடு பங்களிப்பை எதிர்பார்ப்பார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த காலங்களில் நான் அளித்த 30 நிமிடப் பேட்டிகளில் 20 நிமிடங்கள் என் தந்தையைப் பற்றித்தான் கேட்பார்கள். இப்போது அவரைப் பற்றி கேட்பதைக் குறைத்துக்கொண்டு என்னைப்பற்றி அதிகம் விசாரிக்கிறார்கள்.
“இதைத்தான் கடந்த 20 ஆண்டுகளில் நான் செய்துள்ள சிறிய சாதனையாகப் பார்க்கிறேன்,” என்கிறார் பிரித்வி ராஜன்.

