அஜித்தின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு ஏதும் வரவில்லையே என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரது முழுக் கவனமும் கார் பந்தயப் போட்டிகளில்தான் உள்ளது.
அண்மை காலமாக பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டியளித்து வரும் அஜித், தற்போது, ‘ஆட்டோகார் இந்தியா’ என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது திரையுலகப் பயணம், அதில் எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்து நான் என்னை மதிப்பிட மாட்டேன். என் விதிமுறைகளில் வெற்றியாளனாக இருக்க விரும்புகிறேன்.
“என்னுடைய சினிமா வாழ்க்கையின் தொடக்க நாள்களில், நான் தமிழ் உச்சரிப்பிற்காக விமர்சனங்களை சந்தித்திருக்கிறேன். எனது பலவீனத்தைப் புறக்கணிக்காமல், அதை சரிசெய்ய நான் கடினமாக உழைத்தேன். இப்போது அதன் பலன்கள் தெரிகின்றன,” என்று அஜித் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
படங்களில் நடிக்கும்போது பலமுறை அடிபட்டு, காயங்கள் ஏற்பட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், திரைப்படங்களைப் போலவே, கார் பந்தயங்களின் போது காயங்கள் ஏற்படுவதும் அதன் ஒரு பகுதிதான் எனத் தெரிவித்துள்ளார்.
தமது உடல்நிலை அனுமதிக்கும் வரை கார் பந்தயங்களில் தொடர விரும்புவதாகவும் இது தமக்கான நேரம் எனக் கருதுவதாகவும் அஜித் கூறியுள்ளார்.
“நான் எப்போதுமே கவனத்துடன் செயல்படக் கூடியவன். இது என் நேரம் என்பதால் நிச்சயமாகப் பின்வாங்க மாட்டேன்.
“கடவுளின் அருளால் என் உடல்நிலை நன்றாக உள்ளது. என் குழுவினரும் குடும்பத்தாரும் ஆதரவாக உள்ளனர்.
“60 வயதுக்கு மேல்கூட பந்தயத்தில் ஈடுபடும் பந்தய வீரர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படியென்றால், என்னால் ஏன் சாதிக்க முடியாது?” எனத் தம்மிடம் கேள்விகளை எழுப்புவோரிடமே பதிலுக்குக் கேள்வி கேட்கிறார் அஜித்.
கார் பந்தயம் என்பது தமக்கு வெறும் பொழுதுபோக்கு அல்ல, தாம் அதை ஆழமாக நேசிப்பதாகவும் சொல்லும் அஜித், தனது குழுவை எட்ட முடியாத உயரங்களுக்கு கொண்டு செல்வதே முதன்மை இலக்கு என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

