மீண்டும் நாயகனாக மிஷ்கின்

2 mins read
1574fb9c-ce8b-4482-b00c-4390d053c112
’சுப்பிரமணி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: மாலை மலர்

இயக்குநர் மிஷ்கின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்க உள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ‘நந்தலாலா’ படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார். பிறகு வில்லனாகவும் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த அவர், தற்போது ’சுப்பிரமணி’ என்ற படத்தின் கதைநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை அவரது குருவான இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்குகிறார். ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மிஷ்கினை நடிக்க வைத்து, இயக்கியது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாக இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறியுள்ளார்.

“இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிப்பதால் நடிகராகவும் அவர் ரசிகர்களின் மனம் கவர்வார்.

“படப்பிடிப்பின்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் எனது உதவி இயக்குநராகவே மீண்டும் இயங்கினார் மிஷ்கின். அவருடன் பணியாற்றியதை மறக்க முடியாது,” என்று கூறியுள்ளார் வின்சென்ட் செல்வா.

ஐந்து கொடூரக் கொலைச் சம்பவங்கள் குறித்து மூன்று காவல் அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

அவர்களின் பார்வையில் கொலையாளியை நோக்கி விசாரணை நகர்கிறது. அதன் முடிவில் அனைத்துக்கும் காரணமான குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா, மேலும் பல குற்றச்சம்பவங்கள் நிகழ்வதைத் தடுத்தார்களா என்பதுதான் ’சுப்பிரமணி’ படத்தின் கதையாம்.

அநேகமாக, கொலையாளி வேடத்தில்தான் மிஷ்கின் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், இயக்குநர் தரப்பிலோ மிஷ்கின் வட்டாரங்களிலோ இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே, இந்தப் படத்தில் சில காட்சிகளை மிஷ்கினே இயக்குநராகப் பொறுப்பேற்று படமாக்கினாராம். வின்சென்ட் செல்வாவின் அனுமதியுடன் இது நடந்திருக்கிறது.

தன் கண் முன்னே தனது சீடர் மிஷ்கின் காட்சிகளை இயக்கியதைப் பார்க்க அருமையாக இருந்தது என்கிறார் வின்சென்ட் செல்வா.

குறிப்புச் சொற்கள்