குறைகூறும் சுபாவம் கொண்டவர் மிஷ்கின்: பாண்டிராஜ் கிண்டல்

குறைகூறும் சுபாவம் கொண்டவர் மிஷ்கின்: பாண்டிராஜ் கிண்டல்

2 mins read
2aef6453-8899-4c88-9c6c-a26d130e7a7a
‘பரிமளா & கோ’ படத்தின் படக்குழு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு. - படம்: யூஆர் தமிழ் சினிமா

இயக்குநர் பாண்டிராஜ் எழுத்து, இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோர் முதன்மைப் வேடத்தில் நடித்துள்ள படம் ‘பரிமளா & கோ’. அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் பேசினர். அவர்கள் இருவரின் பேச்சு, தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாண்டிராஜின் மொழித் தேர்ச்சியையும் திட்டமிடும் ஆற்றலையும் பெரிதும் பாராட்டிய மிஷ்கின், வட்டார வழக்கு, மனிதர்கள் பேசும் இயல்பான சொற்கள், மொழியின் நுணுக்கங்கள் அவரிடம் ஆழமாக வேரூன்றியுள்ளதாகக் கூறினார்.

மேலும், “தயாரிப்பாளர் நிதி வழங்குகிறார் என்றால், அவருக்கு லாபகரமான வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்பதில் பாண்டிராஜ் தெளிவாக உள்ளார். அதே நேரத்தில், இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதார்த்தமான எதிர்பார்ப்பையும் அவர் கொண்டுள்ளார். தமிழ்த் திரையுலகில் கூர்ந்த அறிவுடைய இயக்குநர்களில் அவரும் ஒருவர்,” என்றார் மிஷ்கின்.

மிஷ்கினின் பாராட்டுக்குத் தனது பாணியில் கலகலப்பாகப் பதிலளித்துப் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், மிஷ்கினை மேடையிலேயே நகைச்சுவையாகக் கிண்டல் செய்தார்.

“பொதுவாக எதைக் கூறினாலும் அதில் தவறு கண்டுபிடிக்கும் அல்லது கடுமையாக விமர்சிக்கும் இயல்புடையவர் மிஷ்கின். அவர் தமிழ்ப் படங்களைப் பெரும்பாலும் பார்க்க மாட்டார். அப்படியிருந்தும், நான் இந்தப் படத்தின் கதையைக் கூறியபோது, எவ்விதக் கருத்து முரண்பாடும் இல்லாமல் உடனடியாக இணங்கி, நடிக்கச் சம்மதித்தார்,” எனப் பாண்டிராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இத்திரைப்படத்தில் மிஷ்கினுடன் இணைந்து யோகி பாபு, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்