நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவரின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக இருவரும் முறையே அறிவித்தனர்.
அதன் பிறகு, நாக சைதன்யாவும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்த சோபிதாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இருவீட்டார் ஆசியுடன் பாரம்பரிய முறைப்படி புதன்கிழமையன்று கோலாகலமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்தில் தெலுங்குத் திரையுலகின் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணம் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட பதிவில், “இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும் சைதன்யாவும் ஒன்றாகத் தொடங்குவதைப் பார்ப்பது என்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது.
“என் அன்புக்குரிய சைதன்யாவுக்கு வாழ்த்துகள். சோபிதா, எங்கள் குடும்பத்துக்கு உங்களை வரவேற்கிறோம். ஏற்கெனவே, நீங்கள் எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிட்டீர்கள்.
“அக்கினேனி நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட அவரின் திருவுருவச் சிலையின் ஆசீர்வாதத்தின்கீழ் நடந்த இந்த அற்புதமான திருமணம் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது,” என்று தன்னுடைய எக்ஸ் பக்கப் பதிவில் குறிப்பிட்டு திருமணப் படங்களைப் பகிர்ந்துள்ளார் நாகார்ஜுனா.
தனது மகனின் திருமணத்துக்கு நடிகர் நாகார்ஜுனா, ரூ.2.5 கோடி மதிப்பில் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகள் திருப்பதி சென்று இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறவும் திட்டமிட்டுள்ளனர்.