நாகசைதன்யா-சோபிதா துலிபாலா காதல் ஜோடிகளுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், பிற்காலத்தில் அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடுவார்கள் என்று கணித்துக் கூறிய ஜோதிடர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் கடந்த இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த வேணு சுவாமி என்ற ஜோதிடர், நாக சைதன்யா-சோபிதா துலிபாலா இருவரும் திருமணம் செய்துகொண்டாலும் சில ஆண்டுகளுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என்றும் அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்துக் கூறினார். இவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து, ஜோதிடர்மீது தெலுங்குத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அத்துடன், தெலுங்குத் திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சுவும் அவரை அழைத்துக் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து, மற்றொரு காணொளியை வெளியிட்டுள்ள வேணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்துவதற்காக அப்படிக் கூறவில்லை. ஜோதிட கணிப்பைத் தான் கூறினேன்.
இனிமேல் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் குறித்தான எனது கணிப்பை பொது வெளியில் கூறப் போவதில்லை,” என்று கூறியிருக்கிறார்.
நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் ஒன்றாக இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு 2017ல் திருமணம் செய்து, 2021ல் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.