ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நாயகன்

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நாயகன்

சம்பவம் நிகழ்ந்தபோது நடிகர் தனுஷும் அருகிலிருந்தார்
படம்: இந்திய ஊடகம்

24 Jun 2024 - 7:13 pm

1 mins read

ஹைதராபாத்: தம்முடைய பாதுகாவலரின் செயலுக்காக தன் ரசிகர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நாகார்ஜுனா.

விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது நாகார்ஜுனாவை நெருங்க முயன்ற உடற்குறையுள்ள ரசிகர் ஒருவரை, அவரின் பாதுகாவலர் தள்ளிவிட்டார். இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

இதனால், அந்த ரசிகர் தடுமாறி கீழே விழப் போனதும், பின்னர் அவர் கீழே விடாதபடி அப்பாதுகாவலர் தாங்கிப் பிடிப்பதும் அக்காணொளியில் தெரிகிறது. அந்த ரசிகர் விமான நிலையத்தில் செயல்படும் காப்பிக் கடை ஊழியர் எனச் சொல்லப்படுகிறது.

பாதுகாவலரின் செயல் குறித்து இணையவாசிகள் பலரும் குறைகூறினர்.

இந்நிலையில், தன் பாதுகாவலரின் நடத்தைக்காக நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

“அச்சம்பவம் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது... அது நடந்திருக்கக்கூடாது. அதற்காக அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் அதுபோல் நடக்காதபடி பார்த்துக்கொள்வேன்,” என்று தனது ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில் நாகார்ஜுனா பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் நிகழ்ந்தபோது நடிகர் தனுஷும் அருகில் இருந்தார். ‘குபேரா’ படத்தில் நாகார்ஜுனாவும் தனுஷும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்