தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயற்பெயரை மாற்றிய பிரபலங்கள்

3 mins read
55b9108b-aa62-49fc-adf1-5226d09c8bc1
தங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தருடன் (நடுவில்) ரஜினிகாந்த், கமலஹாசன். - படம்: பிடிஐ

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர்தான் அவர்களின் அடையாளம். அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த ஒன்றை பெற்றோர் சூட்டுவர். சிலர், ஜோதிடம், பெயர் பொருந்தவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காகத் தங்கள் பெயர்களை மாற்றுவர். அவ்வாறு பெயர் மாற்றிச் சாதித்தவர்களும் இருக்கின்றனர் தோல்வியைத் தழுவியர்களும் இருக்கின்றனர்.

அந்த வரிசையில், திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் பெயர்களை மாற்றிகொண்ட முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து இதில் காணலாம்.

திரைப்படங்களில் நடிக்கவரும் ஒவ்வொரு கலைஞர்களும் தங்களுக்கு வாய்ப்புதந்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் இரண்டாம் பெற்றோராகக் கருதுவர். அப்படிப்பட்ட ஓர் இயக்குநரால் பெயர் மாற்றம் கண்டு, இன்றுவரை தமிழ்த் திரையுலகில் ‘சூப்பர் ஸ்டார்’ எனும் பட்டத்திற்குச் சொந்தக்காரராய் விளங்கும் ரஜினிகாந்தைப் பற்றி முதலில் அறியலாம்.

கர்நாடாகாவிலிருந்து வந்த ஓர் இளைஞரை அடையாளம் கண்டு, அவருக்கு ரஜினிகாந்த் எனப் பெயர் சூட்டியப் பெருமை இயக்குநர் கே. பாலசந்தரையே சேரும். தன்னுடைய இயற்பெயரான சிவாஜிராவ் கெய்க்வாட்டை மறக்கும் அளவுக்கு இன்றளவும் கே. பாலச்சந்தர் சூட்டிய பெயரிலேயே வெற்றிகரமாக வலம்வருகிறார் ரஜினி.

‘என்றும் மார்க்கண்டேயன்’ என்ற புகழோடு வலம்வருவர் நடிகர் சிவகுமார். இவருடைய இயற்பெயர் பழனிசாமி. தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் திரைத்துறைக்காக சிவகுமார் என இவருக்குப் பெயர் சூட்டினார். ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம்கொண்ட சிவகுமார், தன் மூத்த மகனுக்கு சரவணன் எனப் பெயர் வைத்தார். திரைத்துறையில் காலடி எடுத்துவைத்த பிறகு அந்தப் பெயரை சூர்யா என மாற்றிக்கொண்டார்.

திரைத்துறைக்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பதோடு அதை பல படங்களில் நிரூபித்தவர் விக்ரம். இவருடைய இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர்.

வாரிசுகளைத் திரையுலகில் வெற்றிகாண வைக்க அவர்களின் இயற்பெயர்களை அவர்களுடைய பெற்றோரே மாற்றியுள்ளனர். அந்த வரிசையில், மண்மனம் கமழும் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. இவருடைய இளைய மகனான பிரபுவை தனுஷ் எனப் பெயர் மாற்றி ‘துள்ளுவதோ இளமை’ எனும் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் கலை வாரிசான ஜீவாவின் இயற்பெயர் அமர். ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத். இவருக்கு ஆர்யா எனப் பெயர் சூட்டியவர் இயக்குநர் ஜீவா.

நடிகர்கள்கூட பரவாயில்லை திரையுலக நாயகிகள் பெரும்பாலானோர் சொந்தப் பெயரைத் துறந்துவிட்டுதான் தங்கள் திரையுலகப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய பெரும்பான்மையான நடிகைகளுக்கு அவர் ‘ஆர்’ வரிசையில்தான் பெயர் சூட்டினார்.

குறிப்பாக, 80, 90களில் கொடிகட்டிப் பறந்த ராதிகா, ராதா, ரஞ்சனி, ரேவதி என அனைவரும் தங்கள் இயற்பெயரை மாற்றிக்கொண்டு திரைப்பெயர்களுடன் வாழ்பவர்கள் தான்.

‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.

தனது புன்னகையால் ரசிகர்களைக் கிறங்கடித்த சினேகாவுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சுகாசினி ராஜாராம்.

நடிகை ராதிகா.
நடிகை ராதிகா. - படம்: இன்ஸ்டகிராம்

புகழுக்காகப் பெயர்களை மாற்றிக்கொண்ட இவர்களின் வரிசையில் புகழ் அடைந்த பிறகு பெயரில் முன்னொட்டு பின்னொட்டு சேர்ந்தவர்களைப் பற்றி பார்க்கலாம்.

தன் சொந்தத் திறமையால் பன்முகத் திறமையாளராக மிளிர்ந்தவர் டி. ராஜேந்தர். தனது பெயரை விஜய டி. ராஜேந்தர் என மாற்றிகொண்டார். ஆனால், அப்பெயர் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்பது வேறு கதை.

நடிகர் அர்ஜூன் தனது பெயரை அர்ஜூன் சார்ஜா என்றும் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது பெயரை ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் அண்மைக் காலங்களில் மாற்றிக்கொண்டனர். இவர்கள் பெயர்களை மாற்றிக்கொண்டது மட்டுமன்றி அவ்வாரே அனைவரையும் அழைக்கச்சொல்கின்றனர்.

அண்மையில், ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டதுதான் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இப்படி ஏதோ பல காரணங்களுக்காக தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது திரைக்கலைஞர்களிடையே வழக்கமாகிவிட்டது.

நடிகை ரேவதி.
நடிகை ரேவதி. - படம்: ஊடகம்
நடிகர் ஆர்யா.
நடிகர் ஆர்யா. - படம்: ஊடகம்
நடிகர் ஜீவா.
நடிகர் ஜீவா. - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்