திரைத்துறையில் அடுத்த சுற்றுக்குத் தயாராகும் நெப்போலியன்

2 mins read
3a0071ab-fd65-4836-8a91-3a7a52f807ea
குடும்பத்தாருடன் நெப்போலியன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார் நடிகர் நெப்போலியன்.

தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன், அங்கு தகவல் தொழில்நுட்பம், விவசாயம் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு அசத்தி வருகிறார்.

தமிழக அரசியலில் முக்கியப் புள்ளியாக வலம்வந்த இவர், 2011ஆம் ஆண்டு முதல் திரையுலகத்தில் இருந்து அறவே வெளியேறி விட்டார்.

எனினும், பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியவர், கடைசியாக நடித்த படம் கடந்த 2023ல் வெளியான ‘வல்லவனுக்கு வல்லவன்’.

இந்நிலையில், நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்துள்ளார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய ஜீவன் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தாமே தயாரிக்க உள்ளார்.

மேலும், மொத்த படப்பிடிப்பையும் அமெரிக்காவிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல். முழுநீள திகில் படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘ஓநாய்கள் ஜாக்கிரத்தை’ படத்தை இயக்கிய தஞ்சை ஜேபிஆர் இயக்க உள்ளார்.

இப்படம் குறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது மகன்கள் தனுஷ், குணால் ஆகிய இருவரும் ‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தை தயாரித்து வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கதைத்தேர்வு நடந்ததாம். இதுவரை பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடம் அமைந்திருப்பதாக கூறுகிறார் நெப்போலியன்.

குடும்பமாக திரையரங்கு சென்று விரும்பிப் பார்க்கும் வகையில் நகைச்சுவையும் திகிலும் கலந்து அமெரிக்காவில் உருவாகிறது இத்திரைப்படம்.

இயக்குநர் ஜேபிஆர் அமெரிக்காவில் வசிப்பவர் என்பதால் செலவு அதிகமானாலும் பரவாயில்லை என்று அந்நாட்டிலேயே முழு படத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளாராம் நெப்போலியன்.

தற்போது தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்குமாம்.

குறிப்புச் சொற்கள்