தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இவை அனைத்தும் கடவுள் தந்தது: நட்ராஜ்

3 mins read
e31026c1-dd40-4307-b15a-ee7fdd698174
நட்ராஜ். - படம்: ஊடகம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்களுக்கு இணையாக வலம் வருகிறார் நட்டி என்கிற நட்ராஜ்.

அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், தற்போது வெளியாகும் அனைத்து முக்கியமான படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’, ‘மகாராஜா’, ‘கடைசி உலகப்போர்’ என்று நட்டி நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்படுகின்றன.

இந்தி திரையுலகிலும் இவரது ஒளிப்பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்படி கால் நூற்றாண்டு காலமாக நடிப்பிலும் ஒளிப்பதிவிலும் அசத்திவரும் நடராஜ், அண்மையில் வெளியான ‘பிரதர்’, ‘கங்குவா’ ஆகிய படங்களிலும் நடிப்பில் மிளிர்கிறார்.

“இப்படிப்பட்ட உயரத்தை நான் அடைவதற்கு கடவுளின் அருள்தான் காரணம். வாய்ப்பு கொடுத்த அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சுவாரசியமான கதாபாத்திரம் ஏதேனும் இருந்தால் நட்டியைக் கூப்பிடுங்கள் என்று அழைத்து வாய்ப்பு தருகிறார்கள்.

“மறுபக்கம் ஒளிப்பதிவாளராக அதிக உழைப்புத் தேவைப்படும்போதும் என்னைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வருகிறது. இது எல்லாமே கடவுள் கொடுத்தது.

“எந்த வேலையிலும் சிரமங்கள், மகிழ்ச்சி என அனைத்தும் இருக்கும். கஷ்டத்தைத் தவிர்க்க இயலாது. உழைத்தால்தான் முன்னேற முடியும் என்பதை கடந்த 25 ஆண்டுகால அனுபவம் கற்றுத்தந்துள்ளது,” என்று சாந்தமாகப் பேசுகிறார் நட்ராஜ்.

சினிமாவில் நடிப்பதற்கான படங்களைத் தேர்வு செய்ய எந்தவிதமான கணக்குகளும் ஒத்துவராது என்று குறிப்பிடுபவர், வலுவான கதையும் அதை எவ்வாறு திரையில் காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்பதும்தான் முக்கியம் என்கிறார். இந்தக் காரணத்தினால்தான் ‘சதுரங்க வேட்டை’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றதாக கூறுகிறார்.

“கதாபாத்திரமும் கதை நடக்கும் காலகட்டமும் பிடிக்கும்போது ஒரு படத்தில் நடிக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் எளிதில் சென்று சேர்ந்துவிடும் என்று ஒரு கதையைக் கேட்கும்போதே நம் உள்மனது ஓரளவு சொல்லிவிடும். இவற்றை மீறி மிகப்பெரிய வெற்றி என்பது இறைவன் அருள்,” என்று பக்திப்பூர்வமாக பேசும் நட்டி, சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்கிறார்.

கூட்டு முயற்சி இல்லை எனில் திரையுலகில் வெற்றி பெறுவது சிரமமாகி விடும் என்றும் கூறுகிறார்.

“ஒரு படத்தில் நடிக்கும்போது பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். அப்போது இந்தக்காட்சி நமக்கு நல்ல பெயர் வாங்கித்தரும், அந்தக் காட்சி அவருக்குச்சரியாக இருக்கும் என்று விட்டுக்கொடுக்கத் தயங்கக்கூடாது. இதைத்தான் கூட்டு முயற்சி என்கிறேன்.

“திரையுலகில் வாய்ப்பு கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் எனும் வித்தியாசத்தைத்தவிர அனைவருமே திறமைசாலிகள்தான். ஒரு கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டால் நடிப்பில் அசத்திவிடுவார்கள். சந்தேகம் வரும்போதுதான் தடுமாற்றமாக இருக்கும்,” என்று அனுபவம் தந்த பக்குவத்துடன் பேசுகிறார் நட்ராஜ்.

இதுவரை நகைச்சுவைப் படங்களில் அவர் நடித்ததில்லையாம். முதன்முறையாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘பிரதர்’ படத்தில் நடித்த அனுபவம் நன்றாக இருந்ததாம்.

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியான கதையை எழுதி இருந்தார் ராஜேஷ். எனக்கும் முக்கியமான கதாபாத்திரத்தைக் கொடுத்தார். அதேபோல் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டப் படைப்பான ‘கங்குவா’ படத்திலும் நல்ல வேடம் அமைந்தது.

“இயக்குநர் சிறுத்தை சிவா அற்புதமான இயக்குநர். நானும் சூர்யாவும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக அறிந்தேன். சூர்யாவின் மெனக்கெடல் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.

“இப்படத்தில் நடித்த அனைவருக்குமே ஒப்பனை போட மூன்று மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு காலை ஆறு மணிக்குத் தொடங்கும் எனில், அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ஒப்பனை போடத்தொடங்க வேண்டும்.

“நாங்கள் அனைவரும் படப்பிடிப்பை முடித்த பிறகு குளித்து முடித்து சாப்பிடுவதற்கு 9 மணியாகும். ஆனால் சூர்யாவோ 11 மணி வரை உடற்பயிற்சி செய்வார். மறுநாள் மீண்டும் மூன்று மணிக்கெல்லாம் ஒப்பனைக்குத் தயாராகிவிடுவார். இந்த அளவுக்கு ஓர் அர்ப்பணிப்பான நடிகரை நான் பார்த்ததில்லை.

“அவர் படத்துக்காக போட்டிருந்த சிறப்பு உடையை அணியும்போது சாப்பிட முடியாது. சிறிய ‘ஸ்பூனி’ல்தான் சாப்பிட முடியும். அதுவும் கொஞ்சமாகத்தான் உணவு வயிற்றுக்குள் செல்லும். இரவு மட்டுமே நிறைய சாப்பிடலாம். இப்படி பல சிரமங்களை பொறுத்துக்கொண்டு நடித்தார்,” என விவரிக்கிறார் நட்ராஜ்.

தற்போது ‘சொர்க்க வாசல்’, ‘சீசா’, ‘நிறம் மாறும் உலகில்’, ‘ஆண்டவன் அவதாரம்’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

காவல்துறை அதிகாரி, நகைச்சுவை நாயகன், இரட்டை வேடங்கள் என ஒவ்வொரு படத்திலும் புது முயற்சிகளை மேற்கொண்டுள்ளாராம் நட்ராஜ்.

குறிப்புச் சொற்கள்