ரூ.100 கோடி இழப்பீடு கேட்கும் 'பேட்ட' நடிகர்

ரூ.100 கோடி இழப்பீடு கேட்கும் 'பேட்ட' நடிகர்

1 mins read
6ccbe900-1bf2-40d2-854a-f469ac3b0680
நடிகர் நவாசுதீன் சித்திக்கி, அவரின் மனைவி ஆலியா என்ற ஸைனப் சித்திக்கி. படம்: ஊடகம் -

தம் முன்னாள் மனைவி ஆலியா மற்றும் அவரின் சகோதரர் சம்சுதீன்மீது அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார் இந்திய நடிகர் நவாசுதீன் சித்திக்கி.

தம்மை அவமதிக்கும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள நவாசுதீன், அதற்காக அவ்விருவரும் தமக்கு ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அத்துடன், ஆலியாவும் சம்சுதீனும் எழுத்துமூலம் தம்மிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்று அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் சம்சுதீனைத் தம் மேலாளராக நியமித்ததாகவும் நிதி சார்ந்த எல்லாப் பணிகளையும் அவரிடம் விட்டுவிட்டதாகவும் நவாசுதீன் கூறியுள்ளார்.

ஆனால், சம்சுதீன் தம்மை ஏமாற்றி, தமது பணத்தைக் கொண்டு சொத்துகளை வாங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுபற்றிக் கேட்டபோது, சம்சுதீன் தன் சகோதரி ஆலியாவைத் தூண்டிவிட்டு, தம்மீது பொய்வழக்கு தொடுக்கச் செய்ததாக நவாசுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆலியாவும் சம்சுதீனும் சேர்ந்து தமது பணம் ரூ.21 கோடியைக் கையாடிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சொத்துகளைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டதற்கு, கீழ்த்தரமான காணொளிகளையும் கருத்துகளையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவோம் என்று இருவரும் சேர்ந்து தம்மை மிரட்டியதாகவும் நவாசுதீன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நவாசுதீன், நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.